’லக்கி மேன்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, ரேச்சல் ரெபாகா உள்ளிட்டப் பலரது நடிப்பில் தற்போது வெளி வந்து  இருக்கும் படம் ’லக்கி மேன்’  பல படங்களில் யோகிபாபு நடித்து இருந்தாலும், அவர் காமெடி நடிகனாகவும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த வரிசையில் வெளிவந்திருக்கும் “லக்கி மேன்” படம் யோகி பாபுவுக்கு பெரிய அளவில்  வெற்றியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் படத்தின் கதையை பொறுத்தவரையில்,

யோகி பாபு ஒரு தனியார் கட்டுமானம் செய்யும் இடத்தில் புரோக்கராக பணியாற்றுகிறார். ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றினாலும் இவருடைய வாழ்க்கை மிகவும்  வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது. இவருக்கு மனைவி ரேச்சல் ரெபேகாவும், பத்துவயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். எந்த வேலைக்கு சென்றாலும் போராட்டமான வாழ்க்கையில் வாழும் யோகி பாபுவுக்கு அதிஷ்டம் இல்லாதவராக , எங்கு சென்றாலும் தோல்விகளையே சந்திக்கிறார்.  இந்த சூழலில் ஒரு நாள் குலுக்கல் முறையில் யோகி பாபுவுக்கு ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. இதுவரையில் தனக்கு எதிலுமே அதிஷ்டம் இல்லை என வேதனைப்பட்டு கொண்டிருந்த யோகி பாபுவுக்கு கார் பரிசாக கிடைத்ததும் அதை தனக்கு கிடைத்த முதல் பரிசாக நினைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருமானமும் பொருளாதாரமும் உயர்ந்த நிலையில் அனைவரின் முன்னிலையில் பெருமைப்படும் அளவிற்கு தனது மனைவி மகனுடன் வாழ்கிறார். தன் வீட்டின் அருகே குடியிருக்கும் தியாகி ராகுல் தாத்தா தெரிந்தவர் என்பதால் அவர் வீட்டு முன் அவரது அனுமதியுடன் அதிர்ஷ்டமாய் நினைக்கும் காரை தினமும் விட்டு செல்கிறார். இந்நேரத்தில் அந்த  தியாகியை கலெக்டர் பார்க்க வருவதால் அங்கு நிற்கும் காரினால் இன்ஸ்பெக்டர் வீராவுக்கும் யோகி பாபுவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் கலெக்டர் முன் யோகி பாபுவால் அவமானபடுத்தப்படுகிறார் இன்ஸ்பெக்டர் வீரா.  

இந்நிலையில் தனக்கு அதிர்ஷ்டமான கிடைத்த கார் திடீரென காணாமல் போய்விடுகிறது. காணாமல் போன காரால் நிலைகுலைந்து போகும் சமயத்தில் அவரது வேலையும் பறி போகிறது. கார் பங்களா பணம் இருந்தால் மட்டும் அவன் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியுமா? தனக்கு அதிஷ்டமாக வந்த கார் காணாமல் போனது நினைத்து வேதனைப்படுகிறார் யோகி பாபு. காணாமல் போன கார் மீண்டும் அவருக்கு கிடைத்ததா?  இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோகி பாபுவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா என்பதுதான் ‘லக்கி மேன்’ படத்தின் மீதி கதை.

நகைச்சுவை  கதாபாத்திரத்தில் மட்டும் இல்லாமல், கதையின் நாயகனாகவும் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்று வரும் யோகி பாபு, மிக இயல்பான நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  தனது வழக்கமான நகைச்சுவை பேச்சால் சிரிக்க வைத்தாலும், அவர் வேதனைப்படும்  காட்சிகளில் அவரது நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறது. வறுமையில் வாடும்போதும், கார் கிடைத்தவுடன் மகிழ்ச்சியில் பூரிப்பதும், கார் திருடு போன பிறகு வருத்தப்படுதும், காவல்துறை அதிகாரியுடன் நக்கலாக பேசும்போதும் உண்மையிலேயே அனைவரும் பாராட்டும்படி நடித்து இருக்கிறார்.

யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ரேச்சல் ரபேகா,  இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து  தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் வீராவின் நடிப்பு அற்புதம். அப்துல் லீ வரும் காட்சிகளில் நம்மையும் மீறி சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜயன் யோகிபாபுவின் வறுமையையும், பணக்காரராக ஆன பிறகு வரும் காட்சிகளிலும் மிக சிறந்த முறையில் வேறுபாட்டைக் காட்டி ஒளிப்பதிவு செய்து இருப்பது பாராட்டத்தக்கது.

ஷான்ரோல்டனின் இசை கதைக்கேற்ப அமைந்து படம் இயல்பாக நகர உதவி செய்து சிறப்பாக பயணித்திருக்கிறது.

பல படங்களில் நடிகராகப் பார்த்த பாலாஜிவேணுகோபால், இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்து, அவர்களிடம் உள்ள நடிப்பு திறனை இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தி வேலை வாங்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.   இப்படத்தின் திரைக்கதையை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி,  திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்றாலும் அதில் சொல்லப்படும் கருத்துகள் ரசிகர்களை எளிதில் சென்றடையு வேண்டும் என்பதை உணர்ந்து எழுதி, இயக்கியிருக்கிறார். யாராக இருந்தாலும் உழைப்புதான் முக்கியம், அதிர்ஷ்டம் என்பது அது தானாக வருவதுதான் என்ற ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு சொல்லி வரவேற்பைப் பெறுகிறார்.

கண்டிப்பாக ’லக்கி மேன்’ படம் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழ வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"Luckyman" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment