“ரங்கோலி” – திரைப்பட விமர்சனம்!

சென்னை:

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அறிமுக நாயன் ஹம்ரேஷ் அறிமுக நாயகி பிராத்தனா சந்தீப் மற்றும் நாயகனின் தந்தையாக ஆடுகளம் முருகதாஸ், அம்மாவாக சாய் ஸ்ரீ, தங்கையாக அக்சயா, அமித் பார்கவ் மற்றும் பலரது நடிப்பில் சுந்தரமூர்த்தி இசையில், மருதநாயகத்தின் ஒளிப்பதிவில், அறிமுக இயக்குனர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் இத்திரைப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,

சலவை தொழில் செய்து வரும் ஆடுகளம் முருகதாஸ் தன்னுடைய மகள் மனைவியுடன் இணைந்து தன் மகன் ஹம்ரேஷை  சிறந்த முறையில் படிக்க வைப்பதற்காக கடுமையாக உழைக்கிறார். முருகதாஸின் மகன் ஹம்ரேஷ் மாநகராட்சி பள்ளியில்  படித்துக் கொண்டிருக்கும் போது, அங்குள்ள சில மாணவர்களுடன் சண்டையிட்டு அதனால் பிரச்சனை ஏற்பட,  சேர்க்கை சரியில்லாததால் வேறொரு பெரிய தனியார் கான்வென்டில் படிக்க வைக்க நினைக்கிறார் முருகதாஸ்.  ஆனால் ஹம்ரேஷுக்கு கார்ப்பரேஷன் பள்ளியை விட்டு வேறொரு பள்ளியில் சென்று படிக்க விருப்பம் இல்லை.  தந்தை  முருகதாஸ் சொல்லுக்கு கட்டுப்பட்டு மாநகராட்சி பள்ளியிலிருந்து, வேறொரு பெரிய தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார். அப்போது அங்குள்ள மாணவர்கள் ஹம்ரேஷை  லோக்கல் என்று சொல்லி கிண்டல் அடிக்கிறார்கள். அதனால் அந்தப் பள்ளியிலும் ஹம்ரேஷ்  வகுப்பில் படிக்கும் மாணவர்களுடன் மோதல் ஏற்படுகிறது.

அவர்களது  மோதலை தடுத்து நிறுத்தும் சக மாணவி பிரார்த்தனாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அங்கேயே தனது படிப்பை தொடர்கிறார் ஹம்ரேஷ் . இதற்கிடையே பிரார்த்தனாவை ஹம்ரேஷ் காதலிக்கிறார் என்று அங்குள்ள கழிவறையில் எழுதி இருந்ததால், ஹம்ரேஷை  அந்தப் பள்ளியில் இருந்து நீக்கும் முயற்சியில் தலைமை ஆசிரியர் ஈடுபடும்போது,  ஹம்ரேஷின் தந்தையை அழைத்து மகனைப்பற்றி இழிவாக பேசுகிறார்கள். இந்த சூழலில் ஹம்ரேஷ் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து படிக்க அனுமதி கொடுக்கிறார். இதனால் வேதனை அடைந்த ஹம்ரேஷ் எப்படியாவது நன்கு படித்து முன்னேற வேண்டும் என்கிற ஆர்வத்தில் படிப்பில் நாட்டம் செலுத்துகிறார்.  ஆனால் அங்குள்ள மாணவர்கள் அடிக்கடி ஹம்ரேஷை இம்சை செய்வதால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஹம்ரேஷ் தொடர்ந்து அந்த பள்ளியில் படித்தாரா? இல்லையா? என்பதுதான் “ரங்கோலி” படத்தின் மீதி கதை.

நடிகர் உதயா மற்றும் இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களின் சகோதரியின் மகனான ஹம்ரேஷ், முதல் படத்தில் கதாநாயகனக நடிக்கிறோம் என்ற பயமில்லாமல், எந்தவித தயக்கம் இல்லாமல் அழுத்தமான நடிப்பை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே  குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அனுபவம் இருந்ததால் எந்த இடத்திலும் துளி கூட தொய்வு இல்லாமல் அமர்க்களமாக நடித்திருக்கிறார். தாய், தந்தை. சகோதரி ஆகிய மூவரும் ஹம்ரேஷ் நன்றாக படிக்க வேண்டும் கஷ்டப்படும்போது, அதனை நினைத்து  வேதனைப்படும் காட்சிகளிலும் மற்றும் காதல், எமோஷன் காட்சிகளிலும்  சிறப்பான முறையில் நடித்து அசத்தியுள்ளார் ஹம்ரேஷ்,

பள்ளி மாணவியாக நடித்திருக்கும் புதுமுகம் பிரார்த்தனா கதாநாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு பதினாறு வயது பருவ மங்கையாக காட்சியளிக்கும் அவரை, பள்ளியில் படிக்கும் மாணவியை அழைத்து வந்து நடிக்க வைத்தது போலவே இருக்கிறது.

கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது மகன் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறும் போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும், அதே சமயம் வட்டிக்கு பணத்தை கடன் வாங்கி படிக்க வைக்க அவர் கஷ்டப்படும் காட்சிகளிலும் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார். ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளை படிக்க வைக்க பாடுபடும் அந்த நிலைமையை தன் நடிப்பில் தத்ரூபமாக  மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ்.

முருகதாஸின் மனைவியாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ, வயதில் சிறியவராக இருந்தாலும், தனது வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். வட சென்னையில் வாழும் பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீக்கு எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக நிறைய வாய்ப்புக்கள் வரும் என்பதில் ஐயமில்லை.

ஹம்ரேஷின் சகோதரியாக நடித்திருக்கும் அக்‌ஷயாவும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்து கவனம் ஈர்க்கிறார்.

மருதநாயகத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்து காட்சிகளை அனைவரும் ரசிக்கும்படி படமாக்கியிருப்பதை பாராட்டலாம்.

இசையமைப்பாளர் சுந்தரமுர்த்தி K.S இசையில் பாடல்கள் அனைத்தும் கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறது.  பின்னணி இசை திரைக்கதைக்கு மிகுந்த பலம் சேர்த்துள்ளது.

பிள்ளைகளை படிக்க வைக்க கல்வி செலவிற்காக நடுத்தர குடும்பங்களிடையே ஏற்படும் கஷ்டங்களை மிக தெளிவாக அனைத்து மக்களுக்கும் புரியும்படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். பள்ளி மாணவர்களின் இடையே காதல் என்பதை முழுவதுமாக சொல்லாமல் கதையை வேறு திசையில் கொண்டு சென்று இருப்பது அனைவரையும்  ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் “ரங்கோலி” – இளைஞர்கள் ரசிக்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

 

"Rangoli" Movie Review NewsFeatured
Comments (0)
Add Comment