‘அழகி’, ‘பள்ளிக்கூடம்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது “கருமேகங்கள் கலைகின்றன” எனும் படத்தை இயக்கியுள்ளார். ரியோட்டா மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா,இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, அதிதி பாலன்,சிறுமி சாரல், மீனாகுமாரி, மோகனா சஞ்சீவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீ. லெனின் படத்தொகுப்புடன் ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒவ்வொரு உறவுகளின் மேன்மைகளைப்பற்றி சிறந்த முறையில் கதை எழுதி, அந்த கதையை படிக்கும்போது நம்மை நெஞ்சுருக வைப்பவையாக எழுதி, அதை இயக்கி,.அவற்றைக் கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் தங்கர்பச்சான். “கருமேகங்கள் கலைகின்றன” என்ற இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி அனைவரின் மனதையும் நெகிழ வைத்து இருக்கிறார்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,
ஒரு உண்மையான நேர்மையான நீதிபதியாக வலம் வரும் பாரதிராஜா தவறு செய்யும் ஒவ்வொரு கைதிகளுக்கும், தகுந்தவாறு தண்டனை கொடுக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதியான பாரதி ராஜாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகனான கௌதம் வாசுதேவ் மேனன் மட்டும் தன் தந்தை பாரதி ராஜாவுடன் இருக்கிறார். மற்ற இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவருடைய மகனான கௌதம் வாசுதேவ் மேனன் பணத்துக்காக கிரிமினல் வக்கீலாக பணியாற்றுகிறார். ஆனால் அவரது தந்தையான பாரதிராஜாவுக்கு தன் மகன் செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை. அதனால் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் இருவரும் பத்து வருடங்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ் நிலையில், பாரதிராஜாவின் 75-வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட அவரது பிள்ளைகள் நினைக்கின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் வரமுடியாத காரணத்தால் பிறந்தநாள் விழாவிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் கௌதம் வாசுதேவ் மேனன் தன் மனைவியுடன் இணைந்து செயல்படுகிறார்.
பிறந்தநாள் விழா நடைபெறும் நாளில் கௌதம் வாசுதேவ் மேனன் பிரமிட் நடராஜனின் வழக்கு விஷயமாக வெளியூர் சென்று விடுகிறார். இதனால் பாரதிராஜா மிகுந்த வேதனையில் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் அவரது கையில் கிடைக்கிறது. அந்த கடிதத்தை படித்துப் பார்த்த பாரதிராஜா யாருக்கும் தெரியாமல் தனது மகன் கௌதம் வாசுமேனன் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். அந்த கடிதத்தை படித்தவுடன் பாரதிராஜா, வக்கீலாக பணியாற்றிய நடுத்தர வயதில் தான் தொலைத்த உறவை தேடிச் செல்லும்போது, பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றும் யோகி பாபு தான் பெறாத பிள்ளையை தேடி அலைவதால், இருவரும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது. இறுதியில் பாரதிராஜா தேடிச் சென்ற அந்த உறவை கண்டுபிடித்தாரா? யோகி பாபு தான் பெறாத பிள்ளையை தேடி அலைந்த அவருக்கு அந்த பிள்ளை கிடைத்ததா? இல்லையா? என்பது தான் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரதிராஜாவின் வயது முதிர்வு அவருடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், பாரதிராஜாவை மிகவும் சிறப்பான முறையில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர் பச்சான். பல இடங்களில் அவரது உடல் மொழி ஒத்துழைக்க மறுத்தாலும் தன்னால் முடிந்தவரை தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நியாயம் சேர்த்து நடித்திருக்கிறார். அவரது உன்னதமான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் சிறப்புடன் செய்து இருக்கிறார். தான் செய்த குற்றத்துக்காக பரிதவிக்கும் காட்சிகளில் தனது உணர்வுகளை மிக இலகுவாக காட்டி படம் பார்ப்பவர்களை கலங்க வைத்து விடுகிறார். நான்தான் உன் அப்பாம்மா என்று அதிதியின் காலில் விழுந்து அவர் மன்னிப்பு கேட்கும் காட்சி நம் மனதை உலுக்கி விடுகிறது.
கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபுவின் அப்பாவித்தனமான நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. பெறாத பிள்ளைக்காக அவர் ஏங்கும் காட்சிகளில் இதயத்தை கனக்க செய்யும் அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார்.
பாரதிராஜாவின் மகனாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன். தோற்றத்தில் நவநாகரிக மனிதராக இருந்தாலும், வக்கீல் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து அசத்தியுள்ளார்.
அதிதிபாலனின் கதாபாத்திரம் தவறு செய்த அனைவரின் நெஞ்சில் அறைகின்ற மாதிரி மிரட்டியிருக்கிறார்.. அதை கை தேர்ந்த நடிப்பால் மெருகேற்றி சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மஹானா, குழந்தை நட்சத்திரம் சாரல், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என படத்தில் பலர் இருந்தாலும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் அமைந்து இருக்கின்றன.. என்.கே.ஏகாம்பரமின் ஒளிப்பதிவு இராமேஸ்வரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இயற்கை எழில் மிகுந்த இடங்கள் நம் கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
ஏற்கேனவே தங்கர் பச்சான் பல படங்களை இயக்கி இருந்தாலும் இப்படத்தில் திரைக்கதையை மிக துல்லியமாக அமைந்துள்ளதை பாராட்டலாம். தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் இருக்கும் அன்பு, உண்மை, நேர்மை,காதல் போன்றவற்றை இந்த படத்திலும் கொண்டு வந்திருந்தாலும், பாரதிராஜாவை மையமாக வைத்து, திரைக்கதை வடிவம் சிறப்பாக அமைந்தாலும் ஒரு சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகருவது நம்மை நெளிய வைக்கிறது.
மொத்தத்தில் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தை அனைவரும் பார்க்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.