ஏற்கனவே கபடி, கால்பந்து, கிரிக்கெட், ஆக்கி போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் பல வந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கால் பந்தாட்ட விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை அத்துடன் ஆக்ஷன் கலந்த கலவையாக “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” என்ற படம் தற்போது வெளி வந்து இருக்கிறது. இப்படத்தில் ஷரத், அயிரா, மதன் தட்சிணாமூர்த்தி, கஞ்சா கருப்பு, சோனா, நரேன், இளையராஜா, முத்து, மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில்,
இப்படத்தின் கதாநாயகன் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பதால் அனைத்து நண்பர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கால்பந்தாட்ட குழுவை உருவாக்குகின்றனர். தங்களிடம் இருக்கும் கால்பந்து விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில், அந்தக் குழுவுக்கு வாத்தியாராக காலில் அடிபட்டு தனது கால்பந்தாட்ட ஆசையை தொடர முடியாமல் தவிக்கும் மதன் தட்சிணாமூர்த்தியை நியமிக்கின்றனர். அவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளித்து தேசிய அளவில் வெற்றி பெற முயற்சி செய்து. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கிறார் மதன்.
இவரது பயிற்சியினால் ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் சிறப்பான கால்பந்தாட்ட வீரர்களாக உருவாவதோடு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். ஆனால் அந்த ஊரில் மர பட்டறை வைத்திருக்கும் ரௌடியான நரேன் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார். அதற்கு காரணம் அவர் நடத்தும் மரப்பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கால்பந்தாட்டம் ஆடச் சென்று விட்டதால், அவர்களுக்கு பயிற்சி அளித்த மதன் தட்சிணாமூர்த்தியை நரேன் கொன்று விடுகிறார். அதன் பிறகு ஷரத் மற்றும் அவரது நண்பர்கள் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றார்களா? மதன் தட்சிணாமூர்த்தியை கொன்ற நரேனைபழி வாங்கினார்களா? என்பதுதான் “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” படத்தின் மீதிக்கதை!
கதாநாயகனாக நடித்திருக்கும் புதுமுகம ஷரத், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, தனது கதாபாத்திரத்தின் தனமையை உணர்ந்து எந்த காட்சியிலும் தடுமாற்றம் இல்லாமல் நடித்து இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அய்ராவுக்கு இந்தப் படத்தில் அதிகமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் நிறைவாக செய்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் தனது அழகான நடனத்தின் மூலமும், உடல் மொழி மூலமும் ரசிகர்களை கவர்கிறார்.
மதன் தக்ஷிணாமூர்த்திக்கு திக்கி திக்கி பேசும் கதாபாத்திரம் என்பதால் அதற்கு தகுந்தவாறு நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறார்,. மற்றும் கஞ்சா கருப்பு, இளையராஜா.எஸ், காவலராக நடித்திருக்கும் முத்து வீரா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். வில்லனாக வரும் நரேன் தனது தோற்றத்திலேயே நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா, ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதைக்கேற்றவாறு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஏ. ஜே.அலி மிர்சாக் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.
கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் இளைஞர்களிடம் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் ஏழைகளை எப்படி உயர விடாமல் தடுக்கின்றனர் என்ற ஆழமான கருத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ். ஹரி உத்ரா.
மொத்தத்தில், ’எண்.6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.