சச்சின், அபர்நிதி, கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி,கே.பி ஒய்.பிரபாகரன், ரவீனா தாக, நவ்யா சுஜி மற்றும் பலர் நடிப்பில் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்தான் “டீமன்”
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
உதவி இயக்குநரான பணி புரிந்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் சச்சின் திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக தேடி அலைகிறார். அந்த சமயத்தில் சினிமா இயக்குனராக வர வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சச்சின், தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து ஒரு பேய் கதையை சொல்கிறார். அந்த கதை அந்த தயாரிப்பாளருக்கு பிடித்துவிடவே பேய் படத்தை தயாரிக்க சம்மதிக்கிறார். இந்தக் கதையை விவாதம் செய்து, திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்காக, ஸ்கிரிப்ட் ரெடி செய்ய அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார் சச்சின்.
அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் நடக்கிறது. படுத்து தூங்கும்போது பல பயங்கரமான திகிலான பேய் கனவுகள் வந்து சச்சினை மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் பேய் பிடித்தவர் போல் வீதிகளில் அலைகிறார் சச்சின். அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டுகின்றனர். அவர் சில அறிவுரைகள் கூறுகிறார். தன் வீட்டில் இருக்கும் மர்மம் என்ன என்பதை அறிய உயிருக்கு துணிந்து சச்சின் கண்டுபிடிக்க முயலும்போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது.. அப்போதுதான் அந்த வீட்டில் அதற்கு முன் வாழ்ந்தவர்கள், தற்கொலை செய்து இறந்த செய்தி தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் பேய் குடும்பத்தில் சச்சின் சிக்கிக் கொள்கிறார். அந்த வீட்டில் உள்ள பேய்களின் பிடியில் இருந்து சச்சின் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘டீமன்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சச்சின், திகிலான திரில், படம் என்பதால் தனது உணர்வுகள் மூலம் கதையின் தன்மையை உணர்ந்து, மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களிடத்தில் பயத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணதியின் கதாபாத்திரம் பேசப்படுகின்ற அளவுக்கு இல்லை. ஏதோ திணிக்கப்பட்டது போல் இருக்கிறதே தவிர, காதல் விளையாட்டுக்காக இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நண்பராக வரும் கும்கி அஸ்வின் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். மற்றும் ஸ்ருதி பெரியசாமி ,கே பி ஒய் பிரபாகரன் , ரவீணா தாஹா ,நவ்யா சுஜி , தரணி ,அபிஷேக் என நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிறந்த முறையில் நடிப்பைக் கொடுக்கவில்லை.
திகில் நிறைந்த திரில்லிங்கான கதையை மையமாக வைத்து படத்தை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கி இருந்தாலும், .வழக்கமாக திகில் படங்களில் இருக்கும் பயப்படும் விஷயங்கள் எதுவும் சொல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் இப்படத்தை கையாண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் ரோணி ரபேலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதையாக இருந்தாலும் எந்த விதத்திலும் தொய்வு ஏற்படாத வகையில், ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கி பிடித்து இருக்கிறது.
மொத்தத்தில் “டீமன்” – படத்தில் பயமுறுத்தல் இல்லை.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.