லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்!

CHENNAI:

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ்.. அவருடைய குருவும், ‘சந்திரமுகி’ படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் திட்டமிட்டப்படி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.‌

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன் பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. தொடங்கியவுடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை காண்பதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் நாயகனும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், குருவாக போற்றி வணங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ‘சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெறும்’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இதனிடையே ‘சந்திரமுகி 2’ படத்தின் தெலுங்கு பதிப்பினை ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும், படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

"CHANDRAMUKI-2" Movie NewsFeatured
Comments (0)
Add Comment