‘டப்பாங்குத்து’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

CHENNAI:

பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ நடிகர் சங்கர பாண்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டப்பாங்குத்து’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக இசை வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புற கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் இசையை திண்டுக்கல் ஐ. லியோனி வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், கிராமிய கலைஞர்களும் பெற்றுக் கொண்டனர்.

மருதம் நாட்டுப்புற நிறுவனம் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜெகநாதன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டப்பாங்குத்து’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ். டி. குணசேகரன் எழுத, கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்துள்ள ஆர். முத்து வீரா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் ‘தெற்கத்தி பொண்ணு’ புகழ் சங்கர பாண்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக தீப்தி, துர்கா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். ராஜா கே. பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். லட்சுமணன் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ஆக்க்ஷன் பிரகாஷ் , நாதன் லீ ஆகியோர் கையாண்டிருக்கிறார்கள். மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு.

‘டப்பாங்குத்து’ படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”தமிழின் தொன்மையான இசை வடிவங்களான தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பல வகை உண்டு. இவை அனைத்தையும் ஒலிப்பதிவு நாடாக வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து அதனை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

நடிகர் சங்கர பாண்டி பேசுகையில், ” டப்பாங்குத்து என்பது திரைப்படம் மதுரை சார்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் எளிய வாழ்வியலை எதார்த்தமாக விவரிக்கும் திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையை தமிழ் திரை உலகினர் வன்முறைக் களமாக காட்சி படுத்தி வருகிறார்கள். ஆனால் அசலில் மதுரை ஒரு கலை நகரம். மதுரை நகரம் 6000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கலைகளை வளர்த்தெடுத்து வரும் நகரம்.  அப்பகுதியில் வாழும் தெருக்கூத்து எனும் கலை வடிவத்தை… அந்த கலைஞர்களின் வாழ்வியலை எளிய படைப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள் தான். இந்தப் பாடல்களைப் பாடி வீதியோர நாடகங்களில் நடித்து தான் நான் இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறேன். அந்த காலத்து தெருக்கூத்து கலையின் கலை வடிவத்தினை 2K கிட்ஸ்களும் தெரிந்து கொள்ளும் வகையில் படைப்பை உருவாக்கி இருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

திண்டுக்கல் ஐ. லியோனி பேசுகையில், ”  இன்று இந்த அளவிற்கு புகழ் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடித்தளமிட்டவர் மதுரை ராம்ஜி கேசட் நிறுவனத்தின் ஜெகநாதன் தான். வத்தலகுண்டு பகுதியில் தான் என்னுடைய பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பேராவூரணி என்ற ஊரில் நீலகண்ட விநாயகர் ஆலய திருவிழாவில் என்னுடைய பட்டிமன்ற பேச்சை ஒருங்கிணைத்திருந்தார்கள். அப்போது லியோனி என்றால் யார்? என்றே யாருக்கும் தெரியாது. அந்த நிகழ்ச்சிக்கு தொடக்கத்தில் ஆறு பேர் மட்டுமே பார்வையாளராக இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு சிறந்த பாடலுக்கு பொருத்தமானவர் கண்ணதாசனா? பட்டுக்கோட்டையாரா?. நான் அந்த பட்டிமன்றத்தில் பேசி, பாடிக்கொண்டிருந்த போது… ஊர் முழுக்க மைக் செட் கட்டி இருந்ததால் அரை மணி நேரத்தில் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விட்டனர்.

மணிராஜ் என்பவர் ஆலங்குடி கேசட்ஸ் என்ற பெயரில் என்னுடைய பட்டிமன்றத்தை பாதியில் பதிவு செய்து வெளியிட்டார். அதன் மூலமாகத்தான் என்னுடைய குரல் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.இந்தத் தருணத்தில் அதிகாரப்பூர்வமான முறையில் ஒரு பட்டிமன்றத்திற்கு தலைப்பு வைத்து, அதில் என்னையும் என்னுடைய குழுவினரையும் பேச வைத்து, அதை பதிவு செய்து, உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனத்தினர். அதன் பிறகு ஏறக்குறைய 15 தலைப்புகளில் பேச வைத்து உலகம் முழுவதும் இன்று வரை என் புகழை பரப்புரை செய்கிறார்கள். மதுரை ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம். அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘டப்பாங்குத்து’.

டப்பாங்குத்து என்ற சொல் எப்படி பிரபலமானது என்றால், நரிக்குறவர் இன மக்கள் தங்களது கழுத்தில் டால்டா டப்பாக்களை அணிந்து கொண்டு அதில் தாளம் போட்டு பாட்டு பாடுபவர்கள். இதை பார்த்த இரண்டு முதல்வர்களான எம்ஜிஆர்- ஜெயலலிதாவும் தங்களது கழுத்தில் அணிந்து, ஒரு திரைப்படத்தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..’ என பாட்டு பாடி பிரபலப்படுத்தினார்கள். நாட்டுப்புறப்பாட்டு என்பது நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது.‌

கர்நாடக சங்கீதம் ஆட்சி செய்த அந்த காலத்தில் முதன்முதலாக தமிழ் திரைப்படத்தில் நாட்டுப்புற பாடல்களை அறிமுகம் செய்தவர் கலைவாணர் என் எஸ் கே. ‘நாட்டிற்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா..’ எனும் அற்புதக் கலைஞர்.‌ 1957 ஆம் ஆண்டில் கே. வி. மகாதேவன் இசையமைத்து வெளியான ‘வண்ணக்கிளி’ படத்தில் இடம்பெற்ற ‘சித்தாடை கட்டிகிட்டு..’ என்ற கிராமிய பாடல் இன்று வரை பிரபலம்.

கரகாட்டத்திற்கு ‘கரகாட்டக்காரன்’ என்று ஒரு படம் வந்தது. வில்லுப்பாட்டிற்கு ‘வில்லுப்பாட்டுக்காரன்’ என்று ஒரு படம் வந்தது. பாட்டு படிப்பவனுக்கு ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற படம் வந்தது. ஆனால் தெருக்கூத்து என்ற ஒரு கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் இந்த ‘டப்பாங்குத்து’. தெருக்கூத்து என்பது ஒரு இருபது அடிக்குள் தான் இருக்கும். இங்கு ஒரு குழு, அங்கு ஒரு குழு, ஓடி ஓடி ஆடும். இந்த தெருக்கூத்தில் ஆடும் கலைஞர்கள் இந்தப் பாட்டு தான் என்றெல்லாம் அனைத்து வகையான பாடல்களும் பாடுவார்கள். மக்களை 10 முதல் 11 மணி நேரம் வரை சிரிக்க வைப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களால் மட்டுமே இயலும்.

இந்த கலையில் கவர்ச்சியான பாடல் வரிகள் இருக்கும். குறிப்பாக ‘மழை பெய்து ஊரெல்லாம் தண்ணி…’ . ஆண்களுக்கு காமம் உச்சத்தில் இருக்கும் இரவு நேரத்தில் அவர்களின் அந்த எண்ணத்தை திசை மாற்றி… அதனூடாக கலை வடிவத்தை சொல்லி, அவர்களை சிரிக்க வைத்து தெருக்கூத்து கலையை வளர்ப்பது என்பது கடினமானது. அந்தக் கலைஞர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.தெருக்கூத்து கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்

 

"Dappankuthu" Movie NewsFeatured
Comments (0)
Add Comment