‘ரத்தம்’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

பிரபலமான தமிழ் திரைப்படங்களையும், தமிழ் திரைப்படக் கலைஞர்களையும் நையாண்டி செய்யும் ‘தமிழ் படம்’, ‘தமிழ் படம் 2’ ஆகிய முழுநீள ஸ்பூஃப் (spoof) வகை நகைச்சுவைப் படங்களை இயக்கி, அவற்றை வெற்றிப்படங்கள் ஆக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், மேற்கண்ட நகைச்சுவை பாணியிலிருந்து முற்றிலும் விலகி, முழுக்க முழுக்க சீரியஸான கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படமாக இயக்கிஇருப்பதுதான் ‘ரத்தம்’.  இப்படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே.சுந்தர், ஜான் மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்,  படத்தொகுப்பு: டி.எஸ்.சுரேஷ், இசை: கண்ணன் நாராயணன்,  தயாரிப்பு: இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ்’ கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போரா.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

சென்னையில், ஒரு முன்னணி நடிகரின் அதிதீவிர ரசிகன் ஒருவன்,  ஒரு முன்னணி வார இதழ் ‘வானம்’ என்ற புலனாய்வுப் பத்திரிகையின் அலுவகத்திற்குள் நுழைந்து, அந்த நிறுவனத்தின் ஆசிரியரான செழியனை “என் தலைவனைப் பற்றியாடா தப்பா எழுதுற?” என்றவாறு  கத்தியால் 27 முறை குத்திக், கொடூரமாக கொன்று விடுகிறான். கொலைகாரன் தப்பியோட முயலாமல், சம்பவ இடத்திலேயே நின்று கொண்டிருக்க, அலுவலகக் காவலாளிகள் அவனை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார்கள். மறுபுறம் முன்னாள் புலனாய்வு செய்தியாளரான விஜய் ஆண்டனி கல்கத்தாவில் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். மனைவி இறந்துவிட்டதால் அவர் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார். இந்த சூழலில் இவரை பார்க்க வருகிறார் அந்த பத்திரிகை அலுவகத்தின் முதலாளியும், விஜய் ஆண்டனியின் குருவுமான நிழல்கள் ரவி. கல்கத்தாவில் தனது மகளுடன் தனிமையில் வாடிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியை சென்னைக்கு வருமாறு அழைக்கிறார்.

அனால் அவர் மறுத்துவிடுகிறார். அதீத குடியால் தன் மகளை தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்து விடுகிறார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விஜய் ஆண்டனி தனது மகளின் வாழ்க்கைக்காக சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த அவர் அந்த பத்திரிகை அலுவலகத்தில் சென்று நிழல்கள் ரவியை சந்தித்து, ஒரு சாதாரண ஊழியராக அங்கு பணிபுரிகிறார். அப்போது தனது நண்பன் செழியன் கொலை சாதாரண கொலையல்ல…! இதற்கு பின்னால் ஒரு நெட்வொர்க் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார்.

இதையடுத்து, அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டும் அல்ல! மேலும் சிலர் இதே முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதனை கண்டுபிடிக்க முயல்கிறார். இறுதியில் எதற்காக பலர் கொலை செய்யப்படுகிறார்கள்…அதன் காரணம் என்ன? யார் அந்த நெட்வொர்க் மூலம் கொலைகளை செய்வது? என்பதை விஜய் ஆண்டனி, கண்டுபிடித்து அம்பலப்படுத்துவது தான் “ரத்தம்” படத்தின் மீதிக் கதை.

புலனாய்வு பத்திரிகையாளர் ரஞ்சித் குமாராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி. தன் மனைவியை இழந்த சோகத்தையும், கொலைகளுக்குள் மறைந்திருக்கும் மர்மத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீவிரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் படம் முழுவதும் சீரியஸான தனது வழக்கமான நடிப்பை வழங்கி இருந்தாலும். இறுக்கமான் முகத்துடன் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக யதார்த்தமான நடிப்பின் மூலம் பிரமாதமாக சிறப்பு  செய்து இருக்கிறார்.

ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று நடிகைகளும் கதாநாயகிகளாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாக சிறந்த முறையில் பயணித்திருக்கிறார்கள். மூன்று பேரும் தங்களுக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். மஹிமா நம்பியாரின் அழகும், அதனுள் ஒளிந்திருக்கும் கொடூரமான ஆபத்துதன்மையும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

நிழல்கள் ரவி, ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை செய்து இருந்தாலும்,  திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணனின் இசையில் பாடல்கள் இரண்டும் அருமை. பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்  திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

மிக வித்தியாசமான முறையில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் சி.எஸ்.அமுதன், இதுவரை க்ரைம் திரில்லர் வகை கதைக்களத்தில் சொல்லப்படாத ஒரு முறையை கையாண்டிருக்கிறார். இவர்  ஸ்பூஃப் (spoof) வகை நகைச்சுவைப் படங்களைப் போலவே சீரியஸான கிரைம் திரில்லர் படங்களையும் சுவாரஸ்யமான படைப்புகளாக தன்னால் படைத்தளிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் படைப்பான “ரத்தம்” படத்தை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கலாம்!

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.


"RATTHAM" MOVIE NEWSFeatured
Comments (0)
Add Comment