சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா’ படம் எப்படி இருக்கிறது – Satham Indri Muthamtha Movie Review
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘சத்தமின்றி முத்தம் தா’.
ஓர் இளம் பெண்ணை முகமூடி அணிந்த நபர் ஒருவர் துரத்த அந்த பெண் ஓடும் போது ஒரு விபத்தில் சிக்கி சுயநினைவை இழக்கிறார். இந்த சமயத்தில் அந்த நபர் அவளை மருத்துவமனையில் அனுமதித்து அவளின் கணவன் நான் என்கிறார்.
ஒரு கட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டிற்கு சென்று கணவனுடன் வாழ ஆரம்பிக்கிறாள்.
இந்த சூழ்நிலையில் ஒரிஜினல் கணவன் தன் மனைவி காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். அந்த சமயத்தில் தான் தன்னுடன் வாழ்பவர் உண்மையான கணவர் இல்லை என்ற விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? துரத்திய மர்ம நபரின் நோக்கம் என்ன? அவள் மனைவி என்று சொல்ல என்ன காரணம்?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பணத்துக்காக அட்டூழியம் செய்வது கொலை செய்வது என நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.. ஆனாலும் அவருக்குள்ள மனிதாபிமானம் அடிக்கடி எட்டிப் பார்க்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தேவ்.
தன் சினிமா கேரியரே முதல் முறையாக ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். ஒரு பெண்ணை கடத்துவது பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வது என, வில்லன் முகம் காட்டி நடித்திருக்கிறார்
நாயகியாக கன்னட நடிகை பிரியங்கா, ஸ்ரீகாந்த் கணவன் இல்லை என தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சியிலும் தவிப்பிலும் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார். மலையாள நடிகர் ஹரிஷ் பாரடி போலீஸ் கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார். அவரை கூப்பிட்டு வீணடித்திருக்கிறார்கள்
நல்லதொரு த்ரில்லர் கதைக்கான அத்தனை அம்சங்களும் படத்தில் இருந்தாலும், படத்தின் மிக மோசமான மேக்கிங், நடிப்பு எல்லாம் சேர்ந்து, படத்தை நாசப்படுத்தி விடுகிறது.
எந்த ஒரு கட்டத்திலும் நமக்கு எந்த ஒரு சுவாரசியமும் ஏற்படும்படியான காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. படத்தில் வரும் எந்த காட்சிகளிலும் அதற்கு உண்டான அழுத்தமும், நம்முள் உணர்வுகளை கடத்தும் அளவிலான உருவாக்கமும் இல்லை.
கேமரா, எடிட்டிங், மியூசிக், என எதுவும் படத்தின் சரியான வேலையை செய்யவில்லை
முழு படமும் நம் பொறுமையை சோதிப்பதிலேயே கடந்து போய் விடுகிறது. திரில்லர் அனுபவம் தர வேண்டிய படம், சோக அனுபவம் தருகிறது.