நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம்
’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம் !!
இயக்கம்: பிரசாத் ராமர்
நடிப்பு : செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி
இசை: பிரதீப் குமார்
தயாரிப்பு: பூர்வா புரொடக்ஷன்ஸ் - பிரதீப் குமார்
இண்றைய இளைஞர்களைக் கவரும் வகையிலான அடல்ட் காமெடிப்படம்.
மதுரையை சுற்றி வாழும் இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்கிறது படம் படத்தின் கதை மிகவும் எளிதாக தான்
மதுரையைச் சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன் படித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல், காதல் என்ற பெயரில் செல்போனில் பெண்களிடம் கடலைப்போடுவது, திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று கசமுசா செய்வது என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே ஃபேஸ்புக் மூலம் நட்பாகும் நாயகி ப்ரீத்தி கரணை அவரது பிறந்தநாளன்று சந்திக்க முடிவு செய்யும் செந்துர் பாண்டியன், மற்ற பெண்களைப் போலவே அவரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு மாயவரம் பயணிக்கிறார்.
அதன்படி, ப்ரீத்தி கரனை சந்திக்கும் செந்தூர் பாண்டியன், திரையரங்கிற்கு அவரை அழைத்துச் செல்ல முயற்சிக்க, அவரோ திரையரங்கம் வேண்டாம், பூம்புகார் செல்லலாம் என்று சொல்ல, இருவரும் மாயவரத்தில் இருந்து பூம்புகார் செல்கிறார்கள். அங்கு சென்றவுடன் செந்தூர் பாண்டியனின் எண்ணம் நிறைவேறியதா?, ஃபேஸ்புக் மூலம் நட்பான செந்தூர் பாண்டியனுடன் பைக்கில் பயணிக்கும் ப்ரீத்தி கரணின் மனநிலை என்ன? என்பதை, இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையின் பிரதிபலிப்போடு சொல்லும் படம் தான் ‘நல்ல பேரை வாங்க வேண்டும்
பிள்ளைகளே’.
இன்றைய தலைமுறையிடம் இருக்கும் பெரும் பிரச்சனைகளை, ஊதாரித்தனங்களை, எதற்கும் கவலைப்படாது சுயநலத்தோடு வாழும் அவர்களின் வாழ்க்கையை, அப்படியே திரையில் காட்டி இருக்கிறார்கள்.
படத்திற்கு வசனங்கள் மிக பலமாக அமைந்திருக்கிறது. எந்த வசனமும் எழுதப்பட்டதாகவே தெரியவில்லை மிக மிக இயல்பாக படத்தோடு பொருந்தி போகும் வகையில் இருக்கிறது. ஒவ்வொரு வசனமும் சிரிக்க வைக்கிறது.கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல் தினசரி சம்பவங்களை ஒவ்வொன்றாக அடுக்கி, அதன் மூலம் நம்முள் பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இது தான் முதல் படம். ஆனால், மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
மாடல் துறையைச் சேர்ந்த ப்ரீத்தி கரண் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நம் பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக நடித்திருக்கிறார். இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள் அதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன், வயதுக்கு ஏற்ற ஏக்கத்தோடு வலம் வரும் காட்சிகளும், நண்பனுக்காக ஆணுறை வாங்கும் காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். இவரும் புதியவர் தான், ஆனால் நடிப்பில் அசத்தியிருக்கிறார். நாயகியின் தோழியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, அவரது தங்கையாக நடித்திருக்கும் தமிழ்செல்வி ஆகியோரும், அவ்வபோது தலைக்காட்டும் சிறு சிறு நடிகர்களும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் கதாபாத்திரங்களைப் போலவே காட்சிகளையும் மிக எளிமையாக படமாக்கியிருக்கிறார்.
பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமான முயற்சியாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கவும் செய்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஒரு புது டீம் தங்களின் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ நல்ல பெயரை வாங்கி விட்டார்கள்.