மறைக்கப்பட்ட உண்மை ரஸாக்கர் பட விமர்சனம் – Razakar Movie Tamil Review
மறைக்கப்பட்ட உண்மை ரஸாக்கர் - விமர்சனம் !!
சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது.
இந்திய சுதந்திர காலகட்டத்தில் ஹைதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு கொண்டிருந்த காலத்தில் ஹைதராபாத் மாநகரில் ரஸாக்கர் எனும் இஸ்லாமியர்களால் இந்து மக்கள் மீது கெட்டவழிக்கப்பட்ட வன்முறை தான் இப்படத்தின் கதை
1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் படேல், அவரின் செயலாளர் வி. பி மேனன் ஆகியோர் இணைந்து மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ராஜ்ஜியத்தை கைவிட வைத்தனர்.
மற்ற சமஸ்தானங்கள் தங்களது ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்துவிட்ட நிலையில், இறுதியாக காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மட்டும் தனி சமஸ்தானங்களாக இருந்தன. ஒரு பக்கம் காஷ்மீர் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்க, மறுபக்கம் ஹைதராபாத் நிஜாம் தனது ராஜ்ஜியம் கைவிட்டுப் போகாமல் இருக்க கடும் அடக்குமுறைகளை கையாண்டார். பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதக்கலவரங்கள் வெடித்தன. நிஜாம் அரசு மக்களை கொடூரமாக கொன்றழித்தது.
இந்த பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ரஸாக்கர். நிஜாம் அரசின் கீழ் செயல்பட்ட ரஸார்க்கர்கள் (படை) நிஜாம் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாமானிய இந்து மக்களின் மீது நடத்திய வன்முறைகள் இந்தப் படத்தில் பிரதானமாக இடம்பெறுகின்றன.
நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மைச்சமபவத்தை எடுத்துக்காட்டியதற்காக படக்குழுவை பாராட்டலாம் ஆனால் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்று இஸ்லாமியர்களை விமர்சிக்கும் வகையில் படம் அமைந்துள்ளது
மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம். ஒவ்வொரு ஊர்களில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை மீண்டும் மீண்டும் படத்தின் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய வலியைத் தருகிறது.
படத்தில் பாபி சிம்ஹாவையும் வேதிகாவையும் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் கொஞ்சம் அதிர்ச்சி தான் இருவருக்கும் மிகச் சின்ன ரோல் தான். ஆனால் அவர்கள் தான் படத்தின் முக்கிய பாத்திரங்களாக விளம்பரப்படுத்தப்பட்டார்கள்.
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது, பிரம்மாண்டம் தெரிகிறது, அந்த அளவு படத்தை கச்சிதமாக உருவாக்க பாடுபட்டு இருக்கிறார்கள் மிகப் பெரிய உழைப்பு படத்தின் பின்னால் இருக்கிறது ஆனால் அதனுடன் சேர்த்து கொஞ்சம் வெறுப்பும் தெரிவது படத்தின் சோகமாக அமைந்துள்ளது
ராஸாக்கர் மறைக்கப்பட்ட இந்திய வரலாறு தெரிந்து கொள்ள கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .