ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் – ஹரி கூட்டணி… ரத்னம் படம் எப்படி இருக்கு? – Rathnam Movie Review
ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி... ரத்னம் படம் எப்படி இருக்கு?
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படம் எப்படி இருக்கிறது
ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி?
தமிழ் சினிமாவில் ஹீரோகளுக்கு அட்டகாசமான மாஸ் ஆக்சன் படங்களை தந்து கமர்சியல் மாஸ்டர் இயக்குர் எனப் பெயர் பெற்ற ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோ விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் ரத்னம்
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவதாக இவர்களது கூட்டணியில் வந்திருக்கும் ரத்னம் திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்று பார்ப்போம்
ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்கள் இணையும் ஒரு இடம், அங்கு நடக்கும் பிரச்சனை தான் களம். சிறு வயதில் அம்மாவை இழந்த மகன், அந்த ஏரியாவில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சமுத்திரகனயைக் காப்பாற்றி அவரிடம் வளர்கிறான். அவருக்காக வெட்டுக்குத்து என எது வேண்டுமானாலும் செய்கிறான். எதேச்சையாக ரோட்டில் பார்க்கும் ஒரு பெண், அவளுக்கு வரும் பிரச்சனைக்காக களத்தில் கத்தியோடு இறங்குகிறான். அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை எந்த எல்லை வரை இவனை .. இழுத்துச் செல்கிறது என்பதுதான் இந்த திரைப்படம்.
எப்போதுமே ஹரி படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். முனுக்கென்றால் என்றால் கோபத்துடன் அதிரடியில் இறங்கும் ஹீரோ, அவருக்கு பின்னணியில் பாசமான குடும்பம், குடும்பத்திற்கு வரும் பிரச்சனை, அதை தீர்க்கும் ஹீரோ, அதிரடியான வில்லன், அவருடன் சவால் விடுவது, பிறகு அவரைத் தீர்த்த கட்டுவது, முழுக்க முழுக்க இதே டெம்ப்லேட்டில் வேறு வேறு கதை களங்களில், வேறு வேறு நகரங்களில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதை இதுவரை சலிக்காமல் ஒரு வகையில் தமிழக ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் கமர்சியல் படமாக ஹரி தொடர்ந்து தந்து வந்திருக்கிறார்
ஹரி படங்களில் தமிழகத்தின் வாழ்க்கை சூழல்கள் அங்கங்கே அப்படியே இருக்கும். அது தான் அவரின் படத்தின் வெற்றிச் சூத்திரம். உறவுகள் அப்பா, அம்மா சித்தப்பா, சித்தி அண்ணன், பெரியண்ணன், பெரியப்பா எனும் ஒரு பெரிய உறவு கூட்டமே இருக்கும் அதை தாண்டி ஊர்களின் பெயர்கள், உறவுகளின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள் இது எல்லாமே சின்ன சின்னதாக படம் முழுக்க வரும்.
அதே போல் ஹரி படங்களில் டீடெயிலிங்க் லாஜிக் இரண்டும் கமர்சியல் படத்திற்கான அளவில் சரியாக இருக்கும் அவரது ஆக்சன் படத்துக்குள் இருக்கும் லாஜிக் எந்த வகையிலும் ரசிகனை உறுத்தாது, தொந்தரவு செய்யாது, கதை மீது கேள்வி கேட்க வைக்காது.
இது அத்தனையும் ரத்தினம் படத்திலிருக்கிறது. ஆனால் அவரது வழக்கமான படங்களில் இருக்கும் ஹீரோயின் ஐட்டம் டான்ஸ், காமெடி மட்டும் ரத்னம் படத்தில் மிஸ்ஸிங்க்
விஷால் எப்போதும் ஆக்ஷனில் கலக்குவார் இந்த படத்தில் அவருக்கு இது ஃபுல் மீல்ஸ் கிடைத்திருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கும் ஆக்சன் இறுதிவரை நிற்கவே இல்லை, சண்டை காட்சிகள் சலிக்காமல் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு எமோஷன் காட்சி அதற்கு அடுத்து ஒரு சண்டை காட்சி என படம் முழுக்க தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது அவரும் சலிக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் ஒரு கட்டத்தில் ஒரே ஷாட்டில் மூன்று கிலோ மீட்டர் கேமரா செல்கிறது, அது முழுக்க சண்டையும் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இதை அனைத்தையும் ரசிகன் களைப்படையாமல் சொல்லி இருக்கிறார்கள்.
கதாநாயகியை அவர் பார்க்கும் விதமும், அதற்கு அவர் சொல்லும் காரணமும் ஆச்சரியம் என்றாலும், அதை கடைசிவரை கொண்டு சென்ற விதமும் அதை முடித்த விதமும் அட்டகாசம். அந்த இடத்தில் இயக்குனர் தனித்து தெரிகிறார்
மொத்த கதையையும் தாங்கும் பாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு, விஷால் மேல் உள்ள காதலை மறைக்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவிக்கும் இடங்களில் கலக்கியிருக்கிறார்
சமுத்திரகனி விஷாலுக்கு தந்தை ஸ்தானத்தில் மாமாவாக நிற்கிறார் அவரின் நடிப்பு சிறப்பு.
மொத்தத்தில் ஒரு அக்மார்க் ஹரி திரைப்படத்தை பார்த்த உணர்வை இந்த படம் தருகிறது. சின்ன சின்ன கிரிஞ்ச் காட்சிகளும், சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகளும் இருந்தாலும், பல நாட்கள் தமிழ் சினிமாவில் இல்லாத ஒரு கமர்சியல் அனுபவத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
உங்களுக்கு ஹரி ஸ்டைல் ஆக்சன் கமர்சியல் சினிமா பிடிக்கும் என்றால் கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள்