இந்தியன் 2 விமர்சனம் – Indian 2 Movie Review
இந்தியன் 2 விமர்சனம்
இயக்கம் - ஷங்கர்
நடிப்பு - கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரகனி.
இசை - அனிருத்
கதை
சித்ரா லட்சுமணன் என்ற சித்தார்த் துடிப்பான நேர்மையான இளைஞர். இவரது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் ஆவார்கள். இவர்கள் யூ டியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். நாட்டில் நடக்கும் அவலங்களை, லஞ்சங்களை, குற்றங்களை தங்கள் யூ டியூப் சேனல் மூலமாக கேளிக்கையாகவும், கிண்டலாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
லஞ்சம், ஊழல்:
இவர்கள் வீடியோக்கள் மூலமாக சில அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறார் சித்தார்த். சித்தார்த் காதலியாக வரும் ரகுல் ப்ரீத்சிங் நாட்டின் தற்போதைய சூழலை எடுத்துச் சொல்லி எதையும் மாற்ற முடியாது என்று கூறுவதால் மனம் உடைகிறார் சித்தார்த். இதையனைத்தும் மாற்ற, லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்க இந்தியன் தாத்தாவை மீண்டும் அழைக்க நினைக்கிறார் சித்தார்த்.
அவரது அழைப்பை ஏற்று இந்தியன் தாத்தா மீண்டும் வந்தாரா? வந்தவர் லஞ்சம், ஊழலை ஒழித்தாரா? அதற்காக இந்தியன் தாத்தா கையில் எடுத்த திட்டம் என்ன? என்பதே கதை. நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னைகளையும், அரசு அலுவலங்களில் வரும் லஞ்ச விவகாரங்களையும் தொடக்க காட்சிகளில் காட்டியுள்ளார் ஷங்கர்.
இந்தியன் தாத்தாவை கண்டறிய சமூக வலைதளங்களை பயன்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. கமல்ஹாசனின் அறிமுக காட்சிக்கு தியேட்டர்களில் கைதட்டல்கள் பறக்கிறது. திரைப்படங்களில் பல அவதாரம் எடுக்கும் கமல்ஹாசன் இந்த படத்திலும் வேறு வேறு கெட்டப்களில் வந்து அசத்தியுள்ளார்.
சித்தார்த், சமுத்திரகனி நடிப்பு:
நேர்மையாக வாழ வேண்டும் என்று கருதும் இளைஞராக, தவறு செய்தது தந்தையாக இருந்தாலுமே தண்டனை கிடைக்க வேண்டும் என்று கருதும் இளைஞராக சித்தார்த் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்களை வழிநடத்த கமல்ஹாசன் கையில் எடுத்த திட்டமும், அதை இளைஞர்கள் பின்பற்றும் காட்சிகளும் காமெடியாகவும், எமோஷனலாகவும் காட்டப்பட்டுள்ளது.
முதல் பாதியில் பெரும்பாலும் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்களின் ஆதங்கங்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளது. படத்திற்கு மற்றொரு பலமாக சமுத்திரகனி உள்ளார். முதல் பாதியில் ஒரு முகத்தையும், இரண்டாம் பாதியில் வேறொரு முகத்தையும் சமுத்திரகனி காட்டும் விதம் யதார்த்தமாக காட்டப்பட்டிருந்தது.
விவேக், மனோபாலா, மாரிமுத்து:
உலகநாயகன் கமல்ஹாசன் இந்த பாகத்தில் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் ஒவ்வொரு வர்மக்கலையையும் பயன்படுத்தும்போது அதன் பாதிப்பையும், தாக்கத்தையும் கூறுவது ரசிக்கும் வகையில் இருந்தது. படத்தில் கமல்ஹாசன் ரவுடிகளுடன் மோதும் சண்டைக்காட்சி அருமையாக இருந்தது. சிக்ஸ்பேக், எய்ட்பேக்ஸ் வைத்த ரவுடிகளுடன் கமல்ஹாசன் தனது வர்மகலையை பயன்படுத்தி சண்டையிடும் காட்சிகள் அபாரம்.
கடைசியில் போலீசிடம் சிக்கிக் கொள்ளும் இந்தியன் தாத்தா கமல்ஹாசன், அவர்களிடம் இருந்து தப்பிக்கும் விதம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த படத்தின் மறைந்த கலைஞர்களான விவேக், மனோபாலா, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தியன் தாத்தாவை பிடித்தே தீர வேண்டும் என்ற கொள்கையுடன் படம் முழுக்க வருகிறார் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா உடன் சி.பி.ஐ. அதிகாரியாக மறைந்த நடிகர் விவேக் வருகிறார். அவரது வழக்கமான டைமிங் காமெடிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாகத்தில் குறைந்த நேரமே வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு கவனிக்க வைத்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா அடுத்த பாகத்தில் முக்கியமான வில்லனாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஆட்டம் போட வைக்கும் கதறல் பாடல்கள்:
படத்தின் மற்றொரு பலம் அனிருத். படத்தின் உணர்வுப்பூர்வமான இடங்களில் இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறி போயாச்சு படத்தின் பின்னணி இசையை அனிருத் பயன்படுத்தியிருப்பது பாராட்ட வேண்டியது ஆகும். தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ், ரேணுகா, கல்யாணி நடராஜன், தீபா சங்கர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் குறைந்த நேரமே வந்தாலும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
பிரம்மாண்ட இயக்குனர் என்பதை நிரூபிக்கும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள காலண்டர் பாடல் படமாக்கப்பட்ட விதம் பிரம்மிக்க வைக்கத்தக்க வகையில் உள்ளது. பொலிவியாவில் அந்த பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கதறல்ஸ் பாடல் ரசிகர்களுக்கு ஆட்டம் போட வைக்கும் விருந்தாக உள்ளது. படத்தின் இறுதியில் அடுத்த பாகமான இந்தியன் 3 வார் மோடுக்கு குட்டி ப்ரோமாவையும் ஷங்கர் சேர்த்திருப்பது ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.