ராயன் திரைவிமர்சனம்
ராயன் திரைவிமர்சனம்
நடிகர் தனுஷ் இயக்கிய நடித்திருக்கும் 50 வது படம் ராயன் திரைப்படம்.
கதை
காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். அங்கு ஃபாஸ்ட்புட் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சந்தீப் கிஷன் இழுத்து வரும் பிரச்சனைகள் அவ்வப்போது குடும்பத்தை அலைக்கழிக்கிறது.
மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ்.
ஒரு கட்டத்தில் கொலைகார கும்பலிடம் ராயன் குடும்பம் மாட்டுகிறது. அவருக்கு எதிராக யாரெல்லாம் திரும்புகிறார்கள், ராயன் எப்படி குடும்பத்தை காக்கிறார் என்பது தான் கதை.
ஒரு நடிகராக தனுஷுக்கு பாராட்டு மடல் வாசிக்க தேவையில்லை, அவர் தன்னை எப்போதோ நிரூபித்து விட்டார். இந்தப்படத்தில் அவரது ஆளுமை அவருக்கு உதவியிருக்கிறது. ஆனால் இயக்குநராக அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார். முதல் படத்தில் இருந்த தயக்கம் எல்லாம் இல்லாமல் மேக்கிங்கில் கதை சொல்லலில் அசத்தியிருக்கிறார்.
தனுஷ் தவிர பெரிய பட்டாளம் சந்தீஷ் கிஷனுக்கு மிக அழுத்தமான பாத்திரம். படம் முழுக்க அவர் மூலம் தான் நகர்கிறது. அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். துஷாராவுக்கு லைஃப் டைம் பாத்திரம் பல இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார். இன்னொரு தம்பியாக காளிதாஸ் வந்து போகிறார்.
கொஞ்ச நேரம் வந்தாலும் சரவணன் கவர்கிறார். எஸ் ஜே சூர்யா பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறார், ஆனால் அவருக்கான தீனி இல்லை. பிரகாஷ் ராஜ் அதிரடியாக அறிமுகமாகி புஸ்வாணமாகிறார். செல்வராகவன் இனி நடிகராக மிளிர்வார்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும் தான். ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு மிகச்சாதாரண காட்சிகளை வண்ணங்களால் அழுத்தமாக மாற்றியிருக்கிறது.
முதல் 20 நிமிடங்களில் சடசடவென அத்தனை கேரக்டர்கள், சரியான களம், கதை, எல்லாவற்றையும் சொல்லி ஆச்சர்யப்பட வைக்கிறார்கள் .
சரவணன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் மூவரின் பாத்திர பின்னணி, களம் எல்லாம்
செம்ம டீடெயிலிங் உடன் விரியும் போது நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம்,
பரபரவென நகர்ந்து இடைவேளை வரும் போது பட்டாசு வெடிக்கிறது.
இடைவேளைக்கு திரைக்கதையில் நிறைய தடுமாற்றம் தெரிகிறது.
இடைவேளை வரை அட்டகாசமாக இருந்த படம் அதன் பிறகு, பழிவாங்கல் என ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது.
பின்பாதியை இன்னும் சரியாக கையாண்டிருந்தால் ஒரு அசலான ஆக்சன் சினிமாவாக மாறியிருக்கும்.