“ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!

குடும்ப கதைகள் கொண்ட  திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க,  குடும்ப கதைகளையே விரும்புவார்கள்.  கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப  திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது. பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன் எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன. கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல் தான் குடும்பகதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும். முன்பே சொன்னதுபோல் விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள். எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும். அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும்  நிறைந்த அழகான குடும்ப கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.

 

"Anandham Vilayadum Veedu" Movie News.Featured-2
Comments (0)
Add Comment