பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் தமிழுக்கும், தமிழனுக்கும் துரோகம் செய்கின்றன – மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், மதுராந்தகம், காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூர் டவுனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜனநாயகம் பிறந்த ஊர் இந்த ஊர். முதல் முறையாக ஓட்டு முறையை அறிமுகப்படுத்திய இந்த மண்ணுக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். பல்லவ மன்னர்கள் ஆண்ட காஞ்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன். அறிஞர் அண்ணா பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். எழுச்சி மிகுந்த காஞ்சி கோட்டைக்கு வந்திருக்கிறேன். இப்போது முதல்- அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அ.தி.மு.க. எதிர்த்து குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்ததுபோல் கூறியிருக்கிறார். தேர்தல் வந்த காரணத்தால் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு அறிவிப்பை இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.

இதே எடப்பாடி பழனிசாமி முன்பு கூறும்போது ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது. தனக்குத்தான் விவசாயம் தெரியும் என்று கூறினார். எங்கு சென்றாலும் தான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறுகிறார். தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு, போராடக்கூடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசினார். இன்றும் டெல்லி யில் 120 நாட்களை தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. வெயில், பனி என்று எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை தரகர்கள் என்று எடப்பாடி பழனிசாமி வாய் கூசாமல் கூறினார்.

விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடியை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பா.ஜனதா ஆளக்கூடிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் கூட இதனை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதைப்பற்றி பேச பயப்படுகிறார்கள். விவசாயிகளை தரகர்கள் என்று கூறும் எடப்பாடி பழனிசாமியிடம் நான் ஒன்றை கேட்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்று நான் கேட்க விரும்புகிறேன். ஏற்கனவே அறிவித்த நிலைபாடுகளில் இருந்து தற்போது மாறுவதற்கு என்ன காரணம்? ஏனென்றால் இப்போது தேர்தல் வருகிறது. அதனால்தான் பச்சை துண்டு பழனிசாமி இன்று பச்சோந்தி பழனிசாமியாக மாறி மக்களை ஏமாற்ற தொடங்கி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது என்று மக்கள் யாரும் ஓட்டுப் போடவில்லை.அவர் இப்போது முதல்- அமைச்சராக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா மறைந்ததுதான். அது மட்டுமல்ல சசிகலா சிறைக்கு போனதும் காரணம். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கோபித்து கொண்டு தனி அணியை உருவாக்கியதும் காரணம். அதனால் ஏறி வந்த ஏணியை (சசிகலாவை) எட்டி உதைக்கக்கூடிய துரோகியாக இன்று அவர் இருந்து கொண்டிருக்கிறார்

தமிழுக்கும், தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு, பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருகிறார்கள். பா.ஜனதா மட்டுமல்ல ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கள் கூட ஜெயிக்கக்கூடாது. நான் தொடர்ந்து 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று சொல்லிக்கொண்டு வந்தேன். இப்போது நான் சொல்லுகிறேன் தொடர்ந்து நான் பிரசாரம் செய்து கொண்டு வருவதை வைத்து சொல்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெற போகிறது. தப்பி தவறி ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால்கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிடையாது. பா.ஜனதா எம்.எல்.ஏ. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றிபெற்றார். அவர் பா.ஜனதா எம்.பி.யாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் அ.தி.மு.க.வும் சரி, பா.ஜனதாவும் சரி ஜெயித்து வந்துவிடக் கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் பா.ஜனதாவின் கிளை கழகமாக அ.தி.மு.க. உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒரு கரும்புள்ளியை அ.தி.மு.க. ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த கொள்ளை கூட்டத்தை கோட்டையில் இருந்து விரட்டுவதற்காகத்தான் தேர்தல் நடக்கிறது. இங்குள்ள வேட்பாளருக்கு ஓட்டு கேட்க மட்டுமல்ல, எனக்காகவும்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். முதல்- அமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மத வெறியை புகுத்த அனுமதிக்க மாட்டோம். இது திராவிட, பெரியார் மண், மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. மாநில அரசு இழந்த உரிமைகளை மீட்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

FeaturedM.K.Stalin Speech News.
Comments (0)
Add Comment