அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நடக்க இருக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வெற்றி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி கழக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜாண்தங்கம், விளவங்கோடு பா.ஜ.க. வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் பிரச்சனைகள் எங்களிடம் கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள திட்டம் நிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியை வெற்றி பெறவையுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்ச்சி நடக்கும். எப்படி நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும்.
முழுமையான திட்டங்கள் இங்கு வந்துசேரவில்லை. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் அவர்கள் பார்ப்பார்கள், மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மாவட்டம் வளர்ச்சிபெறும். ஏனென்றால் மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடப்பதால் திட்டங்களை கொண்டுசெல்ல முடியும். நான் கடினப்பட்டுதான் பேசுகிறேன். எதிர்கட்சிகள் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதால் பேசி தொண்டை கட்டிவிட்டது. எங்கு பார்தாலும் பொய்தான். பொய்யை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் தான்.
நாகர்கோவில் நகராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆக்கினோம். தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? எங்களுக்கு எம்.எல்.ஏ. முக்கியம் அல்ல. மக்கள்தான் முக்கியம். நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது ஜெயலலிதா அரசு. நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டுவருகிறோம். தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் சமயத்தில் சொன்ன மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினோம்.
இப்போது அதிகமான தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகிறது. அதன் மூலம் பொருளாதார ஏற்றம் பெறுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அரசு தேவையான உதவிகளை செய்கிறது.
இன்று தமிழகம் வெற்றி நடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவந்துள்ளோம். மீனவர்களின் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மானியத்தோடு, வரி விலக்கோடு விசைப் படகுகளுக்கு வழங்கும் ரூ.18 ஆயிரம் லிட்டர் டீசல், இனி ரூ.20 ஆயிரம் லிட்டராக வழங்கப்படும்.அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். பெண்கள் துணி துவைப்பது கடினமான பணி. அவர்கள் பணிச்சுமையை போக்கும் வகையில் எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாஷிங் மிஷின் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து சேரும்.
கேபிள் கனெக்ஷன் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இனி கட்டணம் இல்லாமல் கேபிள் கனெக்ஷன் வழங்கப்படும். விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மகளிர் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கி, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். வீடும், நிலமும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். நகரத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இன்னும் பல திட்டங்களை அம்மா அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.