தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, “ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம” பாடலை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். இந்த பாடலை “எனக்குப் பிடித்த பாடல்” என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது, ‘பொன்ராம் சார் படத்துக்காக ஒரு பாட்டு எழுதணும்ணு அந்தோணிதாசன் அண்ணா சொல்லும்போதே மனசுக்குள்ள ஒரு கொண்டாட்டம். ஏன்னா பொன்ராம் சார் படத்தின் பாட்டெல்லாம் கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும். வேற லெவல்ல ரீச் ஆகும். கூடவே சசிகுமார் சார்… லவ் டூயட் …. கன்ஃபார்ம் படம் பெரிய ஹிட் ஆகும், பாடலாசிரியராக என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்ணு நம்பிக்கை வந்தது.
பொன்ராம் சார், பாடல் வரிகள் பற்றி கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசுனாங்க, “ஏன்டா நீயும் பார்க்கும் போது, சட்டை வேர்க்குது”, “வீச்சருவா போல ஓன் நெனைப்பு கீற”… இதுபோல பாடலில் வரும் விஷயங்களை நீங்க என்ன அர்த்தத்தில் எழுதி இருக்கீங்கன்னு கேட்டாங்க. என் விளக்கத்தைக் கேட்டுட்டு சில இடங்களில் மட்டும் வேற வார்த்தை போடலாம்னு சொன்னாங்க. பாடல் வரிகளுக்காக முழுசா கதையை சொல்லி, படத்தில் பாடல் வரும் இடத்தையும் சூழலையும் சொன்னாங்க. ரொம்ப அன்பான மனிதர். அழகான ஒரு பாடல் எழுத வாய்ப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி சார். படப்பிடிப்பு தளத்தில் சசிகுமார் சாரை சந்தித்தோம். அப்பவே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். “தெக்குதெச காத்தே… போடி என்னை சேர்த்தே” வரிகளை பாடி சந்தோஷப்படுத்தினார்.
உலகம் முழுவதும் திரும்ப திரும்ப பேசப்பட்டுக் கொண்டே இருக்கும், ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நண்பர்களின் நண்பர் சசிகுமார் சாரின் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. படப்பிடிப்பில் என்னிடம் நேரில் சொன்னதை இப்போது மக்களிடம் சொல்லி என்னை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். நாளை (மார்ச் 30) என் பிறந்தநாள். உங்களுடைய வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பெரிய பரிசா நெனைக்கிறேன். மீண்டும் நன்றி சார்.மிக முக்கியமாக இந்த வாய்ப்புக்கு முதல் காரணமான அந்தோணிதாசன் அண்ணாவுக்கு பெரிய நன்றி. நடனம் அமைத்திருக்கும் பிருந்தா மாஸ்டர், சத்யராஜ் சார், சமுத்திரக்கனி சார், கதாநாயகி மிர்ணாளினி, தயாரித்திருக்கும் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம், சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.