பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்… மு.க.ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா அழைப்பு..!

கொல்கத்தா:

மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக வலுவான அரசியல் சக்தியாக உள்ளது. பாஜகவை தோற்கடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் திமுக தலைமையிலான கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதேபோன்ற கூட்டணியை தேசிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைவர்கள் யோசனை கூறி உள்ளனர்.

அவ்வகையில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான  பாஜகவின் தாக்குதலை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறி உள்ள மம்தா, அதற்கான  முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளார். ‘பாஜக அல்லாத கட்சிகள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளையும் சுதந்திரங்களையும் பயன்படுத்துவதை பாஜக தடுக்க நினைக்கிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்து அவற்றை வெறும் நகராட்சிகளாக தரம் குறைக்க விரும்புகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், இந்தியாவில் ஒற்றை கட்சியின் சர்வாதிகார ஆட்சியை நிறுவ விரும்புகிறது.

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து, ஆக்கப்பூர்வமான போராட்டத்தை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், இந்த போராட்டத்தில், உங்களுடனும் மற்ற ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடனும் நான் முழு மனதுடன் இணைந்து செயல்படுவேன்’ என மம்தா கடிதத்தில் கூறி உள்ளார்.

 

 

FeaturedMamtha Banarji News.
Comments (0)
Add Comment