“சுல்தான்” திரை விமர்சனம்!

சென்னை.

சென்னையில் உள்ள ஒரு பெரிய ரவுடி கும்பலின் தலைவனாக உள்ள நெப்போலியனுக்கு பிறக்கும் மகன் கார்த்திக்கு,  அடியாள் லால் சுல்தான் என்று பெயர் வைக்கிறார். பிறக்கும் போதே தாயை இழந்து விடுவதால் ரவுடி கும்பலே சுல்தானை வளர்க்கிறது. பின்னர் சுல்தான் மும்பைக்கு சென்று படித்து முடித்து விட்டு சில வருடங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார். தன் மகன் சுல்தான் வருகையை கொண்டாடும் நெப்போலியன் மீது  மாறு வேடத்தில் வரும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த, அதற்கு காரணம் போலீஸ் தான் என கண்டுபிடித்த சுல்தான், போலீஸ் கமிஷனரை சந்தித்து என்கவுண்டர் செய்யாமல் இருக்க வாய்ப்பு கேட்க, கமிஷனரும் 6 மாத காலம் தங்கள் ரவுடி கும்பல் மீது எந்த வித கேஸ்களும் வராமல் இருந்தால் அனைவரையும் விட்டுவிடுவதாக கூறுகிறார்.

ரவுடிகளின் அரவணைப்பில் வளர்ந்தாலும், அடிதடியை வெறுக்கும் சுல்தான்,  தனது உடன் பிறப்புகளாக பார்க்கும் தனது அப்பாவின் அடியாட்களை திருத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார் . இந்த சூழ்நிலையில் சூரங்குடி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய ரவுடி கும்பலுடன் மோத வேண்டிய நிலை சுல்தானுக்கு  ஏற்படுகிறது.  அந்த பெரிய ரவுடி கும்பலிடமிருந்து கிராம விவசாயிகளை காப்பாற்றினாரா?  6 மாத காலம் தன் தந்தையிடமிருந்த ரவுடி கும்பலை மனம்  திருந்த செய்தாரா? இதற்கிடையில் என்னென்ன பிரச்சனைகளை சுல்தான் சந்தித்தார்… என்பதை மிக சுவாரஸ்யமாக கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்கண்ணன்.

சுல்தான் கதாபாத்திரத்தில் கதாநாயகன் கார்த்தி,  இப்படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், நடனம் என பக்கா கமர்ஷியல் கதாநாயகனாக வந்து தன்  நடிப்பை திறம்பட செய்துள்ளார். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கும் இவர், இப்படத்தில் எதிரிகளை பந்தாடி அதிரடியாக சண்டைப்போடும் காட்சியில், கைதட்டல் பெறுகிறார்.  எப்போதும் போல, தன்னை அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கும்  கார்த்தி, ராஷ்மிகா மந்தனாவின் அழகில் மயங்கி, அவரை காதலிக்கும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது..

கதாநாயகி ராஷ்மிகா மந்தனா தன் கதாபாத்திரத்தைஉணர்ந்து நடித்து இருந்தாலும் இவருக்கு இதுதான் முதல் நேரடி தமிழ் படம், இதில் கிராமத்து பெண்ணாக துள்ளல் நடிப்பில்  அனைவரையும் கவர்ந்து விடுகிறார். இவருக்கு வழக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும், தனது  நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார்.

கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் நெப்போலியன், நெப்போலியனின் அடியாளாக வரும் லால், வில்லனாக நடித்திருக்கும் K.G.F. ராஜு,  மற்றொரு வில்லனாக வரும் நவாப்ஷா ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, தங்களது அனுபவ நடிப்பை மிக சிறப்பாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. ராஷ்மிகா மந்தனாவை பெண் பார்க்க செல்லும் காட்சி காமெடி கலாட்டாவாக இருக்கிறது. மற்றும் சிங்கம்புலி, சென்றாயன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  நடித்து  இருக்கின்றனர்.

இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் சண்டைக் காட்சிகளில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை, ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இரவு நேரக் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் படம்  மெதுவாக நகர்ந்தாலும், வேகமாக நகரும்படி நேர்த்தியாக ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

முழுமையான ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் என்றாலும், ரவுடிகளின்  செய்யும் அக்கிரமங்களைப் பற்றியும், விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியும் அளவாக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், ரசிகர்கள் மத்தியில் சலிப்பு ஏற்படாத விதத்தில் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம என்றுதான் சொல்ல வேண்டும் .

மொத்தத்தில் ‘சுல்தான்’  படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.

ராதாபாண்டியன்.

 

 

 

 

"Sulthaan" Movie Review.Featured
Comments (0)
Add Comment