புதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய்,  இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர். பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் அறிவழகன் பேசுகையில்:

‘என்னுடைய படைப்பை காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாக சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தான் நான் விரும்புகிறேன். அந்த வகையில் ‘பார்டர்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம். இத்தகைய சூழலில் என்னுடைய உதவியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கடினமாக உழைத்து  படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். இன்று வெளியாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின்  டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.

‘ஈரம்’, ‘குற்றம் 23’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ‘குற்றம் 23’ பட வெளியீட்டுக்குப் பிறகு இயக்குனர் ஹரி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியது மறக்க முடியாதது. வினியோகஸ்தர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள் தான் இயக்குனர்களை உற்சாகப்படுத்தும்.

எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் ‘பார்டர்’ இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.

‘குற்றம் 23’ படத்திற்கும், ‘பார்டர்’ படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார். ‘பார்டர்’ படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம். இந்த ‘பார்டர்’ திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். திரை அரங்கிற்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.’ என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசுகையில்:

‘ ரசிகர்களுக்கும், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கைதி’ படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குனர், சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் ‘பார்டர்’ படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு. என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்து விட்டது.  இதற்குமுன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.  தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்றதால் இந்த திரைப்படம் இந்தியா முழுமைக்குமான Pan- Indian Film ஆக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BORRDER Title launch Relese news.Featured
Comments (0)
Add Comment