கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், ‘நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் தயாராகியுள்ளது. இந்த குறும்படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். களவாணி படத்தின் வெற்றிக்கு பக்கபலமான பாடல்களை கொடுத்தவர்.. ‘தேநீர் விடுதி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களின் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியவர்.. இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்துள சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து இந்த குறும்படத்தை தயாரிக்க பக்கபலமாக இருந்தது சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வு தொண்டு நிறுவனம்.
2003ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கணினி துறையில் மிகபெரிய பங்களிப்பை செய்துள்ளது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் குறித்தே அறியாமல் இருந்த கிராமத்து மாணவர்களை கணிப்பொறி அறிவியலை கற்க வைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 2007ல் சங்கர நேத்ராலாயாவுடன் இணைந்து பலருக்கு இலவச கண் சிகிச்சை அளித்துள்ளது. இயற்கை மூலிகைகள், மற்றும் ஆர்கானிக் பண்ணைகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த வருடம் முதல் கொரோனா பொது முடக்கத்தால் உணர்வின்றி தவித்த 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் தங்களது பெற்றோர்களை இழந்து ஆதரவற்று நிற்கும் சிறுவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அந்தவகையில் ‘நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒன்றரை நிமிடம் கொண்ட இந்த குறும்படத்தை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனுடன் இணைந்து உருவாகியுள்ளது.