பேய் பங்களா என தெரியாமலேயே இரவில் படுத்து உறங்கிய ஹீரோ தமன்குமார்!

சென்னை.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார் , ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார்..

“ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்தசமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன. அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன்.

ஆம்.. ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.. இன்னொரு பக்கம் சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நான் நடித்துவரும் வானத்தை போல சீரியல், நூறாவது எபிசோடை தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் முதல் சின்னக்குழந்தைகள் கூட, ‘சின்ராசு’வாக என்னை தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். சினிமாவை எடுத்துகொண்டால் நான் நடித்துள்ள கண்மணி பாப்பா ஹாரர் படமாக உருவாகியுள்ளது. ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து மாறுபட்டு வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடிய பிளாஸ்பேக் மற்றும் வித்தியாசமான கிளைமாக்ஸுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக கொடைக்காணல் பகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள பெரிய பங்களா ஒன்றில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.. பெரும்பாலான நாட்கள் அந்த பங்களாவிலேயே இரவில் தங்கினோம்.. ஆனால், அதுவே ஒரு பேய் பங்களா என்றும் சிலர் அங்கே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள் என்கிற விபரமும் சென்னை வந்த பின்னர் தான் தெரிந்தது.. மேலும் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்த சென்ற படக்குழுவினர் பலரும், தொடர்ந்து நடத்த முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர்.. ஆனால் எந்த சிக்கலும் இன்றி அந்த பேய் பங்களாவில் முதல்முறையாக முழு படப்பிடிப்பையும் முடித்து வந்தவர்கள் எங்கள் படக்குழுவினர் தான், அந்தப்படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அதேபோல யாழி படத்தின் கதையும் வித்தியாசமானது தான். கலாப காதலன் படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த அக்சயா தான் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். மேலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு அவர் மீண்டும் திரும்பி வருவதால் தன்னை வலுவாக நிலைநிறுத்தி கொள்ளும் விதமாக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்திருக்கிறார். இந்த இரண்டு படங்களில் கண்மணி பாப்பா விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவை தவிர இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். சினிமா மற்றும் சீரியலுக்கு என மாதத்தில் பாதிப்பாதி நாட்களை தனியாக பிரித்து கொடுத்து விடுவதால் கால்ஷீட்டில் எந்த சிக்கலும் வருவதில்லை. அந்தவகையில் இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறேன்.

சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானதுதான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன்.. பக்கம் பக்கமான வசனங்களை உடனுக்குடன் மனப்பாடம் பண்ணி பேசவேண்டிய சவால் சீரியலில் உண்டு.. ஷூட்டிங்கின்போது அந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டாலும், எனக்கான டப்பிங்கை நானே பேசமுடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான்.. அந்த அளவுக்கு இரண்டு பக்கமும் பிசியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என்கிறார் தமன்குமார்.. மேலும் தனது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வு என அவர் கூறுவது தளபதி விஜய்யின் பாராட்தையும் அவர் வழங்கிய ஆலோசனைகளையும் தான்.

“சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் எனக்கு காலில் காயம்பட்டிருந்தது. அந்தசமயத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த விஜய் சார் என்னிடம் வந்து அக்கறையாக விசாரித்ததுடன் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறினார். அதுமட்டுமல்ல அந்த படம் ரிலீசானபோது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் சார், என்னை அழைத்து, எனது நடிப்பு பற்றி பாராட்டி பேசியதுடன், ஒரு நடிகனாக எப்படி முன்னோக்கி செல்லவேண்டும் என சில ஆலோசனைகளையும வழங்கி கிட்டத்தட்ட கால் மணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்.. அவர் கூறியவற்றை இப்போதுவரை பின்பற்றி வருகிறேன்” என்கிறார் தமன்குமார்.

 

 

Actor Thaman kumar News.Featured
Comments (0)
Add Comment