அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களை தனது ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அல்லு சிரிஷ்.
இதற்காக ‘ட்ரெயினிங் டே’ எனத் தலைப்பில் அன்றாடம் தனது ஃபிட்நஸ் வீடியோக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ‘ட்ரெயினிங் டே’ சீரிஸின் முதல் வீடியோ அல்லு சிரிஷ் ஜிம்மில் எப்படி அன்றாட பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை விளக்கியிருக்கிறது. அந்த வீடியோவில், அல்லு முதலில் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பின்னர் ஒரு கையில் டம்பிள்ஸ் தூக்குகிறார். அதை முடித்துக் கொண்டு ஸ்டெர்னம் புல் அப் எனப்படும் பயிற்சியை செய்கிறார். வைட் க்ரிப் லேட் புல்டவுன் பயிற்சி என மொத்தம் 30 நொடிகளுக்கு அவர் விதவிதமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகர் அல்லு சிரிஷ், “நான் எனது உடற்தகுதி இலக்குகளை இன்னும் எட்டவில்லை. எனது இந்தப் பயணத்தை சிறு வீடியோக்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அல்லு சிரிஷ் தனது ‘ட்ரெயிங் டே’ சீரிஸில் அன்றாடப் பயிற்சிகள் மட்டுமல்லாது யோகா, பாக்ஸிங் பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களையும் வெளியிடவிருக்கிறார்.
தனது ஃபிட்நஸ் ரகசியங்களை ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.