பா.ஜ.க-வின் கலை-கலாச்சார பிரிவு செயலாளரான இசையமைப்பாளர் குமார் நாராயணன்!

சென்னை.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான குமார் நாராயணன், திரைப்படங்களுக்கு  இசையமைப்பதோடு தனி இசை ஆல்பங்கள் மூலமும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார். ‘எதிர்மறை’ படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், கொரோனா ஊரடங்கின் போது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிட்டார். ”பத்திரம்…” என்று தொடங்கும்  அந்த பாடல், கொரோனா ஆபத்து பற்றியும், மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்பது பற்றியும் விவரிக்கும் விதமாக எழுதப்பட்டிருந்தது. மக்களிடம் மட்டும் இன்றி சமூக ஆர்வலர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அப்பாடல் மூலம் இசையமைப்பாளர் குமார் நாராயணன் பெரிதும் பாராட்டு பெற்றார்.

கொரோனா பாடலை தொடர்ந்து, ”கம்…கம்…முருகா…” என்ற பக்தி பாடலை வெளியிட்டார். ஆன்மீகவாதிகளையும், துயரத்தில் இருக்கும் மக்களை புத்துணர்ச்சியடைய செய்யும் விதத்தில் இருந்த முருக கடவுள் பாடல், இசையமைப்பாளர் குமார் நாராயணனை, அரசியல் உலகிலும் கொண்டு போய் சேர்த்தது. இப்படி திரைப்படம் மற்றும் இசை ஆல்பங்கள் மூலம் பிரபலமடைந்து வரும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியல் பணியாற்ற தொடங்கினார்.

இந்த நிலையில், மத்திய சென்னை கிழக்குப் பகுதி பா.ஜ.க – வின் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் பதவி இசையமைப்பாளர்  குமார் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  கட்சியில் இணைந்ததில் இருந்து தனது தீவிர அரசியல் பணிகளால் மத்திய சென்னை கிழக்குப்பதி மக்களை மட்டும் இன்றி பா.ஜ.க-வின் தமிழக தலைமையை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி இன்னும் அதிகமாக உழைக்க கூடிய உத்வேகத்தை கொடுத்திருப்பதாக, தெரிவித்துள்ளார்.

 

FeaturedMusic Director Kumar Narayanan News.
Comments (0)
Add Comment