சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை. பாரிமுனை, தி.நகர், அடையாறு பகுதிகளில் இருந்து வேளச்சேரி, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் பேருந்துகள் இந்த வழியாக செல்கிறது. மேலும், கிண்டி ரயில் நிலையம் மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையமும் இதன் அருகில் இருப்பதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வருகை அதிகமுள்ள சாலைகளில் மிக முக்கியமான சாலையாக திகழும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையிலும், அங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்திலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
அதனால் தான், அரசு அந்த சாலையை விரிவாக்கம் செய்வதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் சுமார் 2,850 சதுர மீட்டர் இடத்தை பெற்று, ரூ.2.10 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணியும் மேற்கொள்ளப் பட்டது. சாலை விரிவாக்கம் செய்தும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை பாதுகாப்பானதாக இல்லை. காரணம், கிண்டி ரேஸ் கோர்ஸ் எதிரில் உள்ள ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் 17 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளால், சாலை விரிவாக்கத்திற்குப் பிறகும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமமாக இருக்கிறது.
இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும், என்று அப்பகுதி மக்களும், கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயணிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், வெவ்வேறு காரணம் சொல்லி வந்தனர். இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு காண வேண்டும், என்று பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, பல முன்னணி நாளிதழ்களும் இந்த பிரச்சனை குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், கிண்டி ரேஸ் கோர்ஸ் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதில் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆம், கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 17 கடைகளை 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 14 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், என்று அப்பகுதி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டுப்பட்டுள்ள கடைகளில், அக்கடைகளை அகற்றும் நோட்டீஸை வருவாய்த்துறை ஒட்டியுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அதே சமயம், நோட்டீஸ் ஒட்டப்பட்டதோடு நின்றுவிடாமல், 14 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்றுவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டுவதோடு, அந்த இடத்தில் புதியதாக பேருந்து நிலையம் ஒன்றை கட்ட வேண்டும், என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.