முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக உருவாகி வரும்‘ஜாங்கோ’

சென்னை.
எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது. இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ மற்றும் ‘வல்லினம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன். இதை தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.
ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ‘ஜாங்கோ’ என்று மனோ கார்த்திகேயன் கூறுகிறார்.
“தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும், மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்,” என்றார்.
இந்த படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத்தொகுப்பை கையாளுகிறார்.  படத்திற்கு இசை ஜிப்ரான். ஹரிச்சரண பாடிய ‘அனலே அனலே’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு என் இதயா வரிகள் எழுதியுள்ளார். படத்தின் முழு ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது.
*'Jango' - Kollywood's first time loop based film News.Featured
Comments (0)
Add Comment