சிங்கப்பூரில் இளங்கோவன் புரடக்ஷன்ஸ் நடத்திய செப்டம்பர் செலிபரேஷன்!

சென்னை.

உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொவிட் – 19 இப்போது “குடும்ப உறுப்பினர்” ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர் எப்படி இருந்தாலும் அவரை அனுசரித்து அரவணைத்துச் செல்வதைப் போல இப்போது நாமும் கொரோனாவை அனுசரித்து அதோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே இருந்தால் எப்படி என்று தனிமனிதனும் குடும்பமும் நாடும் சிந்திக்க ஆரம்பித்து விட்டன. குடும்பத்தை அனுசரித்து நடத்த அன்பு தேவை. கொரோனாவை கட்டுக்குள் வைக்க, காலப் போக்கில் அதை இல்லாமல் செய்ய ஆரோக்கிய வாழ்க்கை முறையும், சமூக விழிப்புணர்வும் அவசியம் தேவை. சிங்கப்பூர் மக்கள் அதை உணர ஆரம்பித்துவிட்டனர். விழிப்புணர்வை இதயத்துள் வைத்து கொரோனா பயத்தை விரட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசாங்கம் சொன்ன விதிமுறைகளின்படி அவர்கள் சமூக நிகழ்வுகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனம் கவரும் நிகழ்ச்சிகளை நகைச்சுவை எனும் தேன் கலந்து அதை சிறப்பாக நடத்தி வருவதில் வெற்றி கண்டு வருபவர் இளங்கோவன்.

கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு முகநூலில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இளங்கோவன் புரடக்‌ஷன்ஸ் இம்மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிங்கப்பூர் நோரிஸ் ரோடு லோட்டஸ் ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் செலிபரேஷன்ஸ் எனும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை அற்புதமாக நடத்திக் காட்டியது. கொவிட் சூழ்நிலை காரணமாக வீட்டிலேயே கரவோக்கி பாடல் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு ஒரு மேடை அமைத்து தரவேண்டும் எனும் ஆர்வத்தில் நடத்தப்பட்டதுதான் இந்த நிகழ்ச்சி. இதில் ஏற்கனவே அனுபவம் பெற்ற புகழ்பெற்ற கலைஞர்களும் இணைந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினார்கள் என்கிறார் நகைச்சுவை இளவல் இளங்கோவன்.

தொலைக்காட்சி புகழ் முகமட் அலி, சிந்தியா, இளையராஜா புகழ் செல்வம் போன்ற  கலைஞர்கள் பாடி பரவசப்படுத்தியது புதிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்தது. ‘ரெமோ ரெமோ’ பாடல் காட்சி நிகழ்ச்சியை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. சிவாஜி எம்ஜிஆரை மறக்க முடியுமா? அவர்கள் இல்லாமல்தான் நிகழ்ச்சியை நடத்த முடியுமா? ‘மானல்லவோ கண்கள் தந்தது’, ‘அவளா சொன்னாள் இருக்காது’ பாடல் காட்சிகள் கரகோஷம் பெற்றன. இளமாறன், சூசன், நீலு, அப்துல், ஸ்டீவன், தேனி, சரஸ், ரகு, கலா, வெங்கட் என இப்படி பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களையும் பாராட்டி மகிழ்ந்தார் இளங்கோவன். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மாலை வெயில் போன்றவற்றை வாழ்க்கை முறையாய் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து வரவேண்டும் என்பதையும் அவ்வப்போது நகைச்சுவையோடு சொல்லி செப்டம்பர் மாத கொண்டாட்ட நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

சிங்கப்பூர் மக்கள் விழிப்புணர்வோடு  எச்சரிக்கையாய் இருந்துகொண்டு  அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டு வருகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கொரோனா போகும்போது போகட்டும். நாம்  கொரோனா பற்றிய பயத்தை போக்குவோமே!

 

FeaturedSingapore September Celibaretion News
Comments (0)
Add Comment