‘வீராபுரம்’ திரைவிமர்சனம்!

சென்னை.

“அங்காடி தெரு” படத்திற்கு பிறகு அதிக படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கதாநாயகன் மகேஷும், அவரது தந்தையும் அவர்களது கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். அந்த கிராமத்தில் இவர்களது  ஓட்டல் எதிரே கதாநாயகி மேக்னாவின் அழகுநிலையம் இருக்கிறது. நாயகி மேக்னாவை எப்படியாவது காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்று பலவித முயற்சி செய்தாலும், மகேஷ்  அவரிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தயங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் அடிக்கடி தனது  5 நண்பர்களுடன்  ஊர் சுற்றுவது, மது அருந்துவது என பொறுப்பின்றி சுற்றி வருகிறார் மகேஷ்.

இந்த சமயத்தில் தனது கிராமத்தில் மணல் திருடும் கும்பலின் லாரியை மடக்கி, அதில் இருப்பவர்களிடம், மணல் திருட்டைப்பற்றி  தட்டிக் கேட்கிறார் மகேஷின் தந்தை.   இதனால் கோபமடைந்த அவர்கள் மகேஷின், தந்தையை மணல் திருடும் லாரியை மோத விட்டு சாகடிக்கிறார்கள். இதே மாதிரி மூன்று பேர்  லாரி மோதி இறக்கின்றனர். மணல் திருடும் கும்பலால்தான் அனைவரும் சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்ட நாயகன் மகேஷ், மணல் திருட்டை தடுக்கும்  நடவடிக்கையில்  ஈடுபடுகிறார். அதனால் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்? மகேஷ் தனது காதலியுடன் இணைந்தாரா? என்பதுதான் , ‘வீராபுரம்’ படத்தின் மீதிக்கதை

வீரம்  நிறைந்த கிராமத்து இளைஞர்  கேரக்டரில் நடித்திருக்கும் நாயகன் மகேஷ்  தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் விபத்துகள் குறித்த ரகசியம் தெரியும்போது கோபமடையும்போதும், காதலி மேக்னாவிடம் தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கும்போதும் மகேஷின் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு வலு  சேர்த்துள்ளது.

கதாநாயகி மேக்னா, வழக்கமான நாயகி போல் தனக்கு கொடுத்த வேலையை கூடுதல் அழகோடு கச்சிதமாக நடித்திருக்கிறார். நாயகனின் நண்பர்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.

 இயக்குனர் பி செந்தில் குமார், சமுதாய அக்கறையுடன் மணல் திருடும் கும்பலைப்பற்றி கதையை சொன்னாலும்,  திரைக்கதையில் வேகம் இல்லை. சரியான முறையில் அமைக்கவில்லை. ஆனால் மணல் திருடும் கும்பலைப்பற்றி நல்ல விஷயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்.

 இரட்டையர்கள் ரித்தேஷ்ஸ்ரீதர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறார்.

மொத்தத்தில் ‘வீராபுரம்’ படம்  சுமார் ரகம்தான்.

 

 

 

 

 

"Veeraapuram" Movie review.Featured
Comments (0)
Add Comment