‘உடன்பிறப்பே’ திரைவிமர்சனம்!

சென்னை.

தற்போது திரில்லர், கிரைம், பேய் என தொடர்ந்து படங்கள் வந்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ”உடன்பிறப்பே’‘ என்ற ஒரு குடும்ப கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

அண்ணன் சசிகுமாரும், அவருடைய தங்கை ஜோதிகாவும், ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமாக இருக்கிறார்கள். இந்த சூழலில் ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஜோதிகா திருமணம் செய்துக் கொண்ட பிறகு, சில பிரச்சனைகளால் அண்ணன்-தங்கை உறவில் பிரிவு ஏற்படுகிறது. இருவரும் ஒரே ஊரில் வாழ்ந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பேச்சு வார்த்தை இல்லாமல் இருகிறார்கள். இவர்களுடைய இந்த பிரிவுக்கு என்ன காரணம், பாசமுள்ல அண்ணன் – தங்கை ஒன்று சேர்ந்தார்களா இரண்டு குடும்பத்திற்குள்ளும் உள்ள பிரச்சனைகள்  தீர்ந்ததா….இல்லையா, என்பது தான் ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை.

ஜோதிகாவுக்கு அண்ணனாக நடித்திருக்கும் சசிகுமார், அந்த கதாப்பாத்திரத்திற்கு தகுந்த மாதிரி எப்படி பாசத்துடன் நடிக்க வேண்டுமோ அதை மிகச் சிறப்பாக  செய்திருக்கிறார். தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார்.

ஜோதிகா தன் கணவரிடம் பவ்யமாக பேசும்போதும், தன் அண்ணனைப் பற்றி யாராவது தவறாக பேசினால் பொங்கி எழும்போதும் நடிப்பில் அசத்தி விட்டார். சூரியின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருடைய சிறு சிறு டைமிங் வசனங்கள் ‘தாமரை மலருமா? என்று காமெடியாக  பேசும்போது படம் பார்க்கும் அனைவரும் சிரித்து விடுகிறார்கள். ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அடிக்கடி சட்டத்தைப் பற்றி பேசும் ஆசிரியராக மனதில் பதிகிறார்.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், நடிப்பில் அசத்தியிருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிஜாரோஸ், ஆடுகளம் நரேன், நிவேதிதா,  வேல ராமமூர்த்தி, தீபா, சித்தார்த் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு தகுந்த மாதிரி தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறனர்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. கதைக்கு ஏற்றபடி பின்னணி இசையிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார்.வேல்ராஜ் தனது ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை திறம்பட காட்டி இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் இரா.சரவணன் பல காட்சிகளில் நம்மை அழ வைத்து விடுகிறார்.

மொத்தத்தில் ‘உடன்பிறப்பே’ படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.

ராதாபாண்டியன்.

'Udanpirappe" Movie Review.Featured
Comments (0)
Add Comment