ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மறறும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் இன்று 21.102021 வெளியாகியுள்ளது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
“வீரவணக்கம்” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்ரோருவர் கொரோனாவில் மருத்துவமனைக்கு சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் காவல்துறை பணியில் இருந்த போதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அவர்களை பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் Dr. வருண் குமார் IPS, வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா ? என எனைக்கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று உடனே ஒப்புக்க்கொண்டேன். இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம். பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி Dr. வருண் குமார் IPS அவர்களின் ஈடுபாடு தான், இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம் அவருக்கு நன்றி. இன்று இப்பாடல் வெளியாகிறது. பாடலை கேட்டு மகிழுங்கள், நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம் நன்றி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா வெஸ்லி இணைந்து எழுத, சசிகலா அவர்களும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை, இன்று 21.10.2021 காலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.