உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விஜய்!

சென்னை.

 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த மாதத் துவக்கத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல்களின்போது நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும் தேர்தலில் நிற்பதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் விஜய் அனுமதி தரவில்லை. அதற்குப் பதிலாக அவரவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட தொகுதிகளில் சுயேட்சையாக நின்று கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டினார் விஜய்.

 இதையடுத்து இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் 161 இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாகப் போட்டியிட்டனர். இவர்களில் 129 பேர் வெற்றி பெற்று அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தனர். விஜய்க்கே இது நிச்சயமாக இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை சென்ற வாரம் நடிகர் விஜய் நேரில் அழைத்து சந்தித்து பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

விஜய்யின் அரசியல் பார்வையின் துவக்கமாகவே இந்த விஷயம் பார்க்கப்படுகிறது. தனிக் கட்சியைத் துவக்குவதற்கு அவர் நேரம், காலம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. இனி வரக் கூடிய மாநகராட்சி தேர்தலில் நிச்சயமாக அவரது ரசிகர் மன்றத்தினர் போட்டியிடுவார்கள். தொடர்ந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் கட்சியைத் துவக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

FeaturedIlaiya Thalapathy Vijai News.
Comments (0)
Add Comment