தனியார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை.

டெல்லியில் கடந்த 25 ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்நாள் சாதனைக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனது. மயக்கம், தலைச்சுற்றல் காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், மூளைக்கு செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பை சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், 29-ஆம் தேதியன்று ரஜினி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது.

அதில், “நடிகர் ரஜினிகாந்த் தலைசுற்றலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை காரணமாக பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் ரஜினி இருந்தார் என்பது தெரிய வந்தது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் கடந்த இரு நாட்களாக ரஜினி இருந்தார்.

இந்நிலையில், அவருக்கான சிகிச்சை நிறைவடைந்ததை அடுத்து, ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து போயஸ்கார்டன் இல்லம் திரும்பிய அவரை பூசணிக்காய் சுற்றி திரிஷ்டி கழித்தனர். வீட்டுக்குள் ரஜினி செல்லும்போது வாசலில் இருந்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினரைப் பார்த்து கையசைத்தும் வணக்கம் தெரிவித்தும் உள்ளே சென்றார். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி மேலும் சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

FeaturedSuper Star Rajinikanth News.
Comments (0)
Add Comment