நமது நாட்டிற்கு முன்னேற்றம் தேவை என்றாலும், நாட்டிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாலும், நல்ல அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்படி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் தேர்தல் முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும், இது கதையின் நாயகனான சாம்ஸ்ஸின் கனவு. இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை…தனது நண்பர்களிடம் அடிக்கடி அவர் சொல்லும் போது அனைவரும் நமக்கு எதற்கு வம்பு…என அறிவுரை கூறுகிறார்கள். இந்த சூழலில் சாம்ஸ் நாட்டையே மாற்றும் அளவுக்கு ஒரு கனவு காண, அந்த கனவு மூலம் அரசியல் உலகில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் ஏற்படுத்துகிறது. அது என்ன சீர்த்திருத்தம் என்பது தான் ’ஆபரேசன் ஜுஜுபி’. (Operation JuJuPi) படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சாம்ஸ், தன்னால் சீரியஸான கதாப்பாத்திரங்களையும் கையாள முடியும், என்பதை மிக நேர்த்தியாக நிரூபித்திருக்கிறார். சாம்ஸின் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி மற்றும் மகளாக நடித்த நடிகை தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.. பிரதமராக நடித்திருக்கும் ராகவ், படவா கோபி, வையாபுரி, மனோ பாலா, சந்தானபாரதி, ஜெகன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பலவிதமான லொக்கேஷன்களை பல கோணங்களில் தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும், என்பதில் கவனமாக காட்டியிருப்பவர், தனது கேமரா பணியையும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல, கையாண்ட விதம் அனைத்தும் மிகவும் சிறப்பு.
ஆங்கிலப் படமாக இருந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் கதை புரியும்படி மிக கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர்.
கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் அருண்காந்த், இசை, கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 14 பணிகளை ஒருவராகவே செய்திருந்தாலும், எதிலும் குறை இல்லாமல் மிக நேர்த்தியாக பணியாற்றியுள்ளார். இயக்குநர் சொல்லும் அரசியல் தீர்வு மற்றும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் அத்தனையும் மிகத் தெளிவாக சொல்லி இருப்பதோடு, கடைசி கட்ட காட்சியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டல் பெறுவதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மொத்தத்தில், ’ஆபரேசன் ஜுஜுபி’(Operation JuJuPi) நாட்டுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கருத்தை சொல்லும், வித்தியாசமான அரசியல் திரைப்படமாக அமைந்து இருக்கிறது.
ராதாபாண்டியன்.