‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்
இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.
‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன்றுகிறது. பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “ரைட்டர்”. ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.