சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது எனது தந்தையும் தாயும்தான்.. சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கெளரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கி வரும் பல்கலைக்கழகங்கள் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இன்று வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இணையம் வழியாக உரையாற்றி தொடங்கி வைத்தார். விழாவில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெற்றியாளர் மாரியப்பன் மற்றும் நடிகர் சிலம்பரசன் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறையை சார்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். சிம்புக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போது இருவரும் கண்கலங்கினார்கள்.

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிலம்பரசன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும்தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால்தான். 9 மாதக் குழந்தையில் இருந்து என்னை இந்தப் பயணத்தில் இணைத்து அவர்கள்தான். எனவே இந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.” என்றார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசுகையில், “சிம்பு இன்று முதல் டாக்டர் சிம்பு என அழைக்கப்படுவார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கலைத்துறைக்குப் பலவித சேவைகள் செய்துள்ளார் சிம்பு. ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கியவர். இன்னும் அவரின் பயணம் தொடர்கிறது. 50 படங்களைத் தற்போது நெருங்கி வருகிறார். திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞராகத் திகழ்வதால் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன். சிம்புவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..” என்றார்.

 

"Vels Institute of Technology 11th Annual Convocation NewsFeatured
Comments (0)
Add Comment