’என்ன சொல்ல போகிறாய்’ திரை விமர்சனம்!

சென்னை.

மிர்சி ரேடியோவில் ஜாக்கியாக பணிபுரிகிறார் அஸ்வின்குமார். இவருடைய தந்தை  அஸ்வின் குமாருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவந்திகா மிஸ்ராவை பெண் பார்க்கிறார். பல கதைகளை எழுதி, கதாசியராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது கணவர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக அஸ்வின்குமாரை தனியாக அழைத்துக் கொண்டு, “உங்களது வாழ்க்கையில் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? என்று கேட்கிறார். அப்போது தன்னை ஒரு பெண் காதலித்ததாகவும் ஆனால் இப்போது இல்லை என்றும் பொய் சொல்லுகிறார். உடனே அந்தப் பெண் யார் என்று கேட்கிறார் அவந்திகா மிஸ்ரா.  ஒரு பெண்ணை காதலித்ததாக  பொய் சொல்லும் நாயகன் அஸ்வின் குமாரிடம்,  காதலியை பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார் அவந்திகா.

ஒன்றும் புரியாமல் தவித்த அஸ்வின்குமார் தன் நண்பன் புகழிடம் சென்று எல்லா விவரங்களையும்  சொல்கிறார்.  புகழ் தன்  நண்பனுக்கு உதவி செய்ய எண்ணி, தேஜு அஷ்வினியை அழைத்து தன் நண்பனின் வருங்கால மனைவியை பற்றிக் கூறி, அவரை காதலியாக நடிக்கவும் வைக்கிறார். தேஜு அஸ்வினியை அவந்திகா சந்திக்க வேண்டும் என்று சொன்னதால், இதற்கு ஒப்புக் கொண்ட அஸ்வின் குமார், தேஜு அஸ்வினியை ஒரு உண்வகத்திற்க்கு வரவழைத்து  இருவரையும் சந்திக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் அஸ்வின்குமாருக்கு, தேஜு அஸ்வினி மீது காதல் ஏற்படுகிறது. கடைசியில், நாயகன் அஸ்வின்குமார் தனக்கு பெண் பார்த்த அவந்திகா மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டாரா அல்லது காதலிக்க ஆரம்பித்த தேஜு அஸ்வினியை மணமுடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின்குமார், காதல் கதைக்கு ஏற்றவாறு  காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். சில காட்சிகளில் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். காதலை வெளிப்படுத்தும் இடங்களில் அவரது நடிப்பில் பெரிய தடுமாற்றம் ஏற்படுகிறது.. நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா இருவரும் தங்களது  நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கைத்தட்டல் வாங்கிய அஸ்வின்குமார், காமெடி நடிகர் புகழ் இருவருக்கும் இந்த படத்தில் பேசப்படுகின்ற காட்சிகள் எதுவும் பெரிய அளவில் அமையவில்லை.

ஒரு காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஹரிஹரன். புதிய கோணத்தில் காதல் கதையை சொல்ல முயற்சி செய்து இருந்தாலும், அவர் பல காட்சிகளில் நிறைய வசனங்களை பேச விட்டு கதையை நகர்த்தி இருக்கிறார்.. நிறைய காதல் காட்சிகள் படத்தில் வந்தாலும், பெரியதாக எந்தக் காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. பல காட்சிகளில் இடம் பெறும் வசனங்கள் பழைய படங்களில் வருகின்ற மாதிரி இருக்கிறது

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலத்தை  சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் காதலை சொல்லாமலே இருந்திருக்கலாம்.

 

By,

RADHAPANDIAN.

 

"Enna Solla Pogirai" Movie Review News.Featured
Comments (0)
Add Comment