திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. கதாநாயகன் ஜெய் மீது மீனாட்சி காதல் கொள்கிறார். ஆனால் மீனாட்சியின் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த சூழ்லில் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என தாலிகட்டும் நேரத்தில் மனம் மாறி மீனாட்சிக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்லோகிதாஸிடம் நடந்தவற்றை கூறி, திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.
அவரும் காதலுக்கு ஒப்புதல் கொடுத்து, ஜெய்க்கு மீனாட்சியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருமணத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு முன்பு தனது தம்பிகளை அழைத்து, ஜெய்யை கொலை செய்து விடுமாறு கூறுகிறார். இந்த சூழ்நிலையில் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும், சரத்லோகிதாஸ் குடும்பத்திற்கும் ஏற்கனவே தீராத பகை இருந்து வருகிறது. ஜெயபிரகாஷ் தனது அடியாட்களை வைத்து அந்த திருமணம் நடக்கும் சமயத்தில் சரத்லோகிதாஸ் மற்றும் அவரது தம்பிகளையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். சரத்லோகிதாஸ் தனது குடும்பத்துடன், ஜெய்யையும் அழைத்துக் கொண்டு கோயிலில் திருமணம் செய்ய போகும்போது, ஜெயபிரகாஷ் தனது அடியாட்களுடன் வந்து சரத்லோகிதாஸையும், அவரது தம்பிகளையும் கொலை செய்ய சண்டையிடுகிறார். அச்சமயத்தில் ஜெய், மீனாட்சி தந்தை சரத்லோகிதாஸை கொலை செய்கிறார். ஜெய் ஏன் மீனாட்சியின் தந்தையை கொலை செய்கிறார்? அதன் பின்ணணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘வெண்ணிலா கபடி குழு’ ‘நான் மகான் அல்ல, ‘அழகர் சாமியின் குதிரை’ ‘ஜீவா’ ‘பாண்டியநாடு’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சுசீந்திரன்’ ஏற்கனவே இது மாதிரியான கதைகள் பல வந்தாலும், இந்த கதையில், பல கமர்ஷியல் விஷயங்களை புகுத்தி முழுமையான பொழுதுபோக்கு படமாக இயக்கி, மெதுவாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான ஒரு கிராமத்து வாலிபராக நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்க ரொம்பவே முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவரது முயற்சி நடிப்பில் அளவாகத்தான் இருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அஹான்ஷாசிங் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அனைவரது மனதையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.
ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பால சரவணனின் நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் ஜெய்க்கு பாராட்டுகள் என்றாலும் பாடல்கள் சுமார் ரகம்தான். அஜிஸின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
திண்டுக்கல் அதன் சுற்றுவட்டார கிராம அழகையும், இயற்கை எழில் நிறைந்த காட்சிகளையும், தனக்கே உரிய பாணியில் சிறப்பாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ விறுவிறுப்பு, வீரம் இருந்தாலும் சண்டை ரசிகர்களுக்கு விருந்து.
இந்த படத்தின் ‘ரேட்டிங் 3/5’
BY
RADHAPANDIAN.