நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து செய்தியாளர்கைள சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கடந்த 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழே இந்த வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்.
இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது. திமுகவினர் இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திமுகவினர் எந்தப்புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போதே செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னோம்.. எங்களை ஆட்சியில் அமரவைத்தவர்கள் திருப்தியடையும் வகையிலும், வாக்கு அளிக்காதவர்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்கவில்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எங்களின் பணி இருக்கும். அப்படி தான் 9 காலமாக பணி செய்து வருகிறோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு மாநகராட்சி மேயர் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.