‘கிளாப்’ படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள் நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மகனை தடகள வீரராக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எப்படியாவது தடகளத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் தந்தை பிரகாஷ்ராஜ் இறந்து விடுகிறார். அந்த விபத்தில் மகன் ஆதி ஒரு காலையும் இழந்து விடுகிறார். இதனால் ஆதி தன்னுடைய கனவான தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை காதலித்த காதலி ஆகான்ஷா சிங்கை பிரிந்து விட நினைக்கும் போது, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆதியை திருமணம் செய்து கொள்கிறார். தான் அடைய முடியாத லட்சியத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆதி, மதுரையில் கிரிஷா குரூப் என்ற பெண் தடகளத்தில் சாதித்து தேசிய சாம்பியனாக வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் அந்தப் பெண்ணால் தடகள வீராங்கனை ஆக முடியவில்லை. அதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அந்தப் பெண்ணை எப்படியாவது தடகள வீராங்கனை ஆக்க தேசிய சாம்பியன் போட்டியில் வெற்றி வாகை சூட பல பயிற்சியாளர்களிடம் அழைத்து செல்கிறார் ஆதி. ஆனால் அந்தப் பெண்ணை தடகள வீராங்கனையாக உருவாக்குவதற்கு யாரும் முன் வரவில்லை. தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதித்து தேசிய சாம்பியனாக வேண்டும் என்று நினைக்கும் ஆதி, அந்த பெண்ணுக்கு தடகள பயிற்சி அளிக்கிறார். தன்னால் முடியாத கனவையும், லட்சியத்தையும் யாரும் இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பெண்ணை தடகள வீராங்கனையாக உருவாக்கினாரா? எதிரிகள் மத்தியில் அந்த பெண்ணை வெற்றி பெற வைத்தாரா? என்பது தான் இப்படத்தின் கதை.
ஒரு காலை இழந்து கிரிஷா குரூப்புக்கு தடகள பயிற்சி அளிக்கும் காட்சிகளில் ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் கவர்ந்து விடுகிறார். ஒரு தடகள வீரர் ஒரு காலை இழந்து தவிக்கும் காட்சி இயல்பான நடிப்பை, கதைக்கு ஏற்றவாறு எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக ஆகான்ஷா சிங் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் தன்மையை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். தடகள பெண்ணாக வரும் கிரிஷா குருப் தடகள பயிற்சி செய்யும் ஒவ்வொரு காட்சியிலும் தன் அற்புதமான நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக வரும் நாசர் வழக்கமான நடிப்பையும் மற்றும் பிரகாஷ் ராஜ் முதிர்ச்சியான நடிப்பையும் கொடுத்து சிறப்பு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் கதையாக இருந்தாலும் திரைக்கதையை சிறந்தமுறையில் காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் பிரித்வி ஆதித்யா, விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இன்னும் கதையில் சற்று வேகத்தை செலுத்தி இருக்கலாம்.
தடகள போட்டியில் பக்கேற்கும் நல்ல காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவை சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவின் குமார்.
இதுவரை பல சிறந்த படங்களுக்கு இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான். ஆனால் பின்னணி இசையின் மூலம் படத்தின் கதைகளத்தில் கலக்க வைத்திருக்கிறார் இளையாராஜா.
மொத்தத்தில் ‘கிளாப்’ விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.