ஓசூர் இராயல சீமா ஓட்டலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி & பரிசளிப்பு விழா!

ஓசூர்

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது. உலகை முடக்கி மனித குலத்தை அடக்கி கடந்த ஈராண்டாக கொடூர ஆட்சி புரிந்த கொரோனா இந்தியாவில் இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது இந்தியாவின் பால் கொரோனா காட்டிய இரக்கமா? அல்லது இந்திய மக்களிடையே வந்த விழிப்புணர்வா? எது எப்படி இருப்பினும் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்திய மக்கள் இப்போது கொரோனா பயமின்றி இயல்பாக இருக்கத் தொடங்கி விட்டனர் என்றே சொல்லலாம். அரசியல், ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கி விட்டன. அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ஓசூர் இராயல சீமா ஓட்டலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

மதிய உணவு நேரம் கடந்தும் விழா சிறிதும் சோர்வு இன்றி தொய்வு இன்றி நடந்தது சிறப்பு அம்சம். இந்த முகநூல் இயந்திர உலகில் மாணவச் செல்வங்கள் மேடையில் நின்று பார்வையாளர் முகம் பார்த்து தமிழை அருவியாய் கொட்டி அனைவரையும் கருத்து மழையில் நனையச் செய்தது ஓர் ஆனந்த ஆச்சரியம். யாருக்கு பரிசு கொடுப்பது யாரை எப்படி கழட்டி விடுவது என்று நடுவர்கள் திக்கு முக்காடிப் போயினர். கம்பீரமான குரலும் தெளிவான அழுத்தமான உச்சரிப்பும் கருத்துகளை ஆணித்தரமாய் பேசிய விதமும் சாப்பாட்டு நேர பசியையும் மறக்கச் செய்தன. தமிழ் உணர்வாளர் புலவர் பாண்டியனார் நினைவாக அவரது பிறந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியினை ஓசூர் ஜேசிஐ அமைப்பு அழகாக நடத்திக் காட்டியது. விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக உரத்த சிந்தனை உதயம் இராம் திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் இராசி அழகப்பன் தொழில் முனைவர் ஜேசி  பா. மேகநாதன் ஆகியோர் வந்திருந்தனர். வித்தியாசமான தலைப்புகளில் மிகவும் வித்தியாசமாகப் பேசி அசத்திய மாணவச் செல்வங்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி பரிசளித்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.

பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசு தரவேண்டும் என்று இராசி அழகப்பன் அடம் பிடிக்க அதுவும் நிறைவேற்றப்பட்டது. நண்பர்களைக் காண ஒரு பார்வையாளராக வந்திருந்த சிவாஜி ரசிகன் தகடூர் வெங்கட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மகிழ்ந்தார்.  வருங்காலத் தலைமுறை வண்ணத் தமிழை கால மாற்றத்துக்கு ஏற்ப வரும் சந்ததிக்கு கொண்டு செல்லும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினை ஓசூர் விருது வழங்கும் விழா நிகழ்வு நமக்கு ஏற்படுத்திச் சென்றது.

FeaturedWriter Rasi.Azagappan &Venkat News
Comments (0)
Add Comment