நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.
நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த ஃபர்ஸ்ட்லுக் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரவேண்டும் என்பதே ஆகும். தவிர, இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர திரில் சவாரியாக இப்படம் இருக்கும். இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் ‘கேப்டன்’ படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சாட்சியமளிக்கிறது, மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“கேப்டன்” திரைப்படத்தை Think Studios நிறுவனம், நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
“கேப்டன்” படத்திற்கு, D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. நடிகர் ஆர்யாவின் முந்தைய படங்களான ‘சார்ப்பட்டா பரம்பரை’ மற்றும் ‘டெடி’ ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.