ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர்.
இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது :
“இது நமது குடும்ப விழா. வந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவர்கள் பிரஷாந்த்தின் பிறந்த நாள் விழாவிற்கு வந்து வாழ்த்துவார்கள். பல ஆண்டுகளாக அவர்களுடனேயே எங்கள் குடும்பமும் இருக்கிறது என்று உணர்கிறேன் . சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘அந்தகன் ‘திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது .தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய வெற்றி பெற்றது .சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூல் செய்த படம் அது.தமிழிலும் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
நிறைய நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு படமாக இப்படம் உருவாகிறது .பிரஷாந்துடன் அனுபவமிக்க பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் , மனோபாலா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒரு சிறு வேடத்திற்கு கூட பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.பிரஷாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம். இங்கே வந்திருக்கும் ஆர்.கே செல்வமணி அவர்கள் மீண்டும் மீண்டும் இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்த அளவிற்கு அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல இயக்குநர்கள் சங்கத்துக்குப் பாடுபடக் கூடியவரும் கூட. அவர் தனது வெற்றிப் படங்கள் போலவே இந்த சங்கப் பணிகளிலும் முத்திரை பதித்துள்ளவர்.
இன்று திரைப்படக்கல்லூரியில் படிக்காமலேயே பல இளைஞர்கள் இயக்குநர் கனவோடு வருகிறார்கள். அவர்கள் இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பள்ளி ஆரம்பித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று செல்வமணி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் .அதற்குப் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நான் ஐந்து லட்ச ரூபாய் அன்பளிப்பாக வழங்குகிறேன்.வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ”இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசும்போது,
“நான் பிரஷாந்த் சாருடன் ‘சாக்லெட் ‘என்ற ஒரு படத்தில் மட்டும்தான் பணி புரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது.அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன். பிரஷாந்த் சாரை வெறும் நடிகராகவே மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்.அவருக்கு நல்ல கதை அறிவும் தொழிநுட்ப அறிவும் உள்ளது. திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது பிரஷாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று .இதை என்னிடம் பலர் நேரில் நேரிலேயே கூறியிருக்கிறார்கள். இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது தியாக ராஜன் சார் மௌனமான ஒரு சிரிப்பு சிரித்தார். ஆனால் பிரஷாந்த் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “எந்த தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் விரும்புவாரா? எனக்கு என் அப்பா தான் எல்லாம்” என்றார். அந்த நொடியிலேயே அவர் மீது எனக்கு மேலும் மதிப்பு அதிகரித்தது.” இவ்வாறு ஏ.வெங்கடேஷ் கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,
“பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள ஒரு நடிகர் பிரஷாந்த்.அவரது பலம் வெளிநாடுகளில்தான் தெரியும். அந்த அளவிற்கு அவரை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் வெளிநாடுகளில் உண்டு. மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடத்தி வெற்றி பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அந்தளவுக்கு அவருக்கு அங்கே ரசிகர்கள் இருக்கிறார்கள்.பிரஷாந்த் தன் தந்தை மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது. அப்படிப்பட்டவர் மேலும் பல உயரங்களைத் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் தினா பேசும்போது,
” பிரஷாந்தின் புகழ் எந்த அளவிற்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. அவருக்கு வெளிநாடுகளில் நல்ல புகழ் உள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் இசை விழாக்களுக்கும் நட்சத்திரக் கலை விழாக்களுக்கும் அவர் வந்தால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிடும் .இதை நாங்கள் பலமுறை அவரை அழைத்துச் சென்றபோது உணர்ந்திருக்கிறோம். எங்கள் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குப் பலமுறை விழாக்களுக்கு வந்து அவர் இப்படி ஒத்துழைப்பு கொடுத்து உதவியது பலருக்கும் தெரியாது. இவர் மாதிரி ஒரு பன்முகத் திறன் வாய்ந்த நடிகரைப் பார்க்க முடியாது. மைக்கேல் ஜாக்சன் போலவே பல்வேறு திறமைகள் கொண்டவர். அவரைத் தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று கூறலாம் “என்று கூறி வாழ்த்தினார்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசும்போது,
“தியாகராஜன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு முப்பதாண்டுகளாக அதே அளவு நீடிக்கிறது.அன்று பார்த்தது முதல் அப்படியே இருக்கிறார். எனது முதல் இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதை எடுப்பதாக முடிவு செய்தபோது பலரையும் நடிக்க வைத்தோம். நான் திருப்தியடையவில்லை. அப்போதுதான் பிரஷாந்த் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையும் அதிலிருந்த அவரது படத்தையும் பார்த்து அவரை எனக்குப் பிடித்து விட்டது. நடிக்க வைத்தேன். அப்போது பலரும் அவரது தந்தை பற்றி என் காதுபடப் பேசினார்கள்.சரியாக வராது என்றார்கள். அவர் என் படத்தில் நடிக்க வந்த பிறகும் கூட நம்பாத நிலை இருந்தது. முன்பணமும் அவர் வாங்கவில்லை. அதனால் பலரும் சந்தேகிக்கிறார்கள் என்று அவருக்கு நான் 25 ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக முன்பணமாகக் கொடுத்தேன்.அவருக்கு கொடுத்த சம்பளமே அவ்வளவுதான். அவர் நடித்துக் கொடுத்து ஒத்துழைத்தார். படப்பிடிப்பின்போது நான் ரோஜாவை மட்டுமல்ல பிரஷாந்தையும் காதலித்தேன். அந்தளவுக்கு அவரை எனக்குப் பிடித்தது.
அவரது அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக,நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம். இப்போதெல்லாம் மக்கள் நடிகர்களை நடிகர்கள் என்றுதான் பார்க்கிறார்கள். ஹீரோ, வில்லன் என்று யாரும் பார்ப்பதில்லை .எனவே அவர் பல்வேறு திறமைகளை நடிப்பில் காட்டிக் கொள்ள வாய்ப்புள்ள நெகடிவ் ரோல்களில் நடித்தால் பெரிய உயரம் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.
இறுதியாக அனைவருக்கும் பிரஷாந்த் நன்றி கூறினர்.