இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு ஏற்பாடு!

சென்னை:

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளையொட்டி  இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலராலும் நன்கு அறியப்பட்டது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் மாண்பைப் போற்றும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி, பசித்தவர்களுக்கு உணவிடும் விருந்தாளி எனும் திட்டம் என ரெயின்ட்ராப்ஸ் எண்ணற்ற சமூக பணிகள் ஆற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இப்தார் விருந்து மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில்வே அதிகாரிகள் கிளப்பில் இப்தார் விருந்து நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, ஆற்காடு இளவரசர் திவான் நவாப் முகமது ஆசிப் அலி, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், தொழிலதிபர் சி.கே.குமரவேல், டாக்டர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், பின்னணி பாடகர் சம்சுதீன், நடிகர்கள் வெங்கட், நீலிமா மற்றும் மவுண்ட் ரோடு தர்கா அறங்காவலர் சையத் மன்சூருதீன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத 20 ஏழை, எளிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கூறியதாவது,

‘உலகம் முழுதும் உள்ள மனிதர்கள் அனைவரும் சமம். இதில், நீ வேறு, நான் வேறு என்று வேற்றுமை பாராட்டுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. நமது முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக வேற்றுமை உள்ளது. சக மனிதர்கள் நெஞ்சங்களில் வேற்றுமை விதைக்கத் தொடங்கியதே வளர்ச்சியை நோக்கிச் சென்ற இந்தியா, தற்போது பின்னோக்கிச் செல்லக் காரணம். பிரிவினையால் சண்டை, அழிவு போன்ற தீய விளைவுகள் தான் மிஞ்சும். எனவே, இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி செல்லும். முதலில் சுய வளர்ச்சியை எண்ணுங்கள், பிறகு கூட்டாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் இவ்வாறு அவர் கூறினார். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில், மற்ற பண்டிகை மற்றும் விழாக்களை போலவே ரமலான் திருநாளை எவ்வித மத வேறுபாடுகளுமின்றி அனைவரும் கொண்டாட வேண்டும். அந்த வகையில் ரமலான் இப்தார் விருந்து கொண்டாட்டத்துடன் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்ததில் ரெயின்ட்ராப்ஸ் பெருமை கொள்கிறது’  இவ்வாறு அவர் கூறினார்.

 

FeaturedRaindrops Funtion News
Comments (0)
Add Comment