நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம்!

சென்னை.

பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக மனோபாலா ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு வழங்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மனோபாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ள குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞராக பல்லாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மனோபாலாவுக்கு அவரது பணியை பாராட்டி கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

டாக்டர் பட்டம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மனோபாலா, சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை காலம் திரைத்துறையில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

*

 

FeaturedSouthwestern American University News
Comments (0)
Add Comment