ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் பதிப்பான இதில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் தவறான தகவலினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தைப் பற்றி பேசுகின்ற படம் தான் இந்த “பயணிகள் கவனிக்கவும்”.
பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக பணிபுரியும் விதார்த். செவித்திறன் மற்றும் பேசும் திறன் இல்லாத ஒரு உன்னதனமான மனிதர். அவருடைய மனைவி லட்சுமி ப்ரியா. அவரும் தன் கணவரைப் போல மாற்றுத்திறனாளிதான். இந்த தம்பதிக்கு ஒரு மகன், பள்ளியில் படிக்கும் அவனுக்கு கால் பந்தாட்டம் மீது ஆர்வம் அதிகம். ஒரு மகள் அவளும் பள்ளியில் படிக்கிறாள். அப்பாவும், அம்மாவும் பேசும் திறன் இல்லாவிட்டாலும், அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அழகான குடும்பம் அது.
துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன், லீவு போட்டு தன் குடும்பத்தை காண்பதற்காக சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவிடும் ஆர்வமுடைய அவர், ஒரு நாள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். விதார்த்தின் மகள் உடல்நலம் சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் காரணமாக அசதியில் மெட்ரோ ரயிலில் தூங்கி விட்டார் விதார்த். அந்த மெட்ரோ ரயிலில் அசதியில் தூங்கிகொண்டிருக்கும் விதார்த்தை கருணாகரன் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்.
அந்தப் புகைப்பட பதிவை பார்த்து பலரும், விதார்த்தை தவறாக சித்தரித்து மது அருந்தி விட்டு தூங்கிகொண்டிருப்பதாக பதிவிடுகின்றனர். அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விதார்த். தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்கு சட்டத்தின் உதவியை நாடுகிறார். விதார்த்திடம் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை, தவறான வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றவாளியை சைபர் க்ரைம் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். விதார்த் பிரச்சனைக்கு காவல் துறை உதவி செய்ததா? கருணாகரன் காவல்துறை பிடியில் சிக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.
தொழில்நுட்ப வசதி என்பது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் உள்ள ஒரு பிரச்சனையை மிக எதார்த்தமாக எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை சூப்பர். வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய, சமூக வலைத்தளங்களில், செல்போனை உபயோகிப்பவர்கள் செய்யும் பல தவறுகள் எப்படி பலருக்கு கெட்ட பெயரை உண்டாக்குகிறது என்பதை குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் தேர்வு செய்த கதைக்களம் மிகவும் பாராட்டுதலுக்குரிய செயல். இந்த கதைக்காகவே இயக்குநர் எஸ்.பி.சக்திவேலுக்கு ஒரு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்
நூலகப் பணியில் உள்ளவராக படத்தில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாதவராக நடித்திருக்கும் விதார்த், நடிப்பில் அனைவரையும் ஆச்சரியபட வைத்திருக்கிறார். தன் மனதில் உள்ள விஷயத்தை சொல்ல நினைக்கும் அவர், பேசும் திறன் இல்லாத காரணத்தால் சொல்லத் துடிக்கும்போது படம் பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கிறார். குறிப்பாக கடைசி கட்ட காட்சியில் படம் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்து விடுகிறார். இந்த படத்தின் மூலம் விதார்த்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது செல்போனை கையில் எடுத்தாலே, அதில் ஏதாவது தவறான செய்திகளை வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவு செய்து இருப்பார்கள். அதற்கு அடிமையாக நடித்திருக்கும் கருணாகரன், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் ஒரு வித்தியாசமாக மிக இயல்பாகவே நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் மாசூம் சங்கர் அழகான நடிப்பில் மிளிர்கிறார்.
வாய் பேச முடியாத மனைவியாக நடித்துள்ள லட்சுமி ப்ரியா தன்னுடைய நடிப்புக்கு குறை வைக்கவில்லை. விதார்த்தின் மகனாக நடித்திருக்கும் சரண் மற்றும் மகளாக நடித்திருக்கும் மதி ஆகியோரும் சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.
அக்கா கணவராக வரும் மூணார் ரமேஷ், காவல் அதிகாரியாக வரும் பிரேம், வீட்டு உரிமையாளராக வரும் கவிதாலாயா கிருஷணன், விதார்த் நண்பராக வரும் ராமச்சந்திரன், கருணாகரனின் நண்பராக வரும் சரித்திரன் என அனைவரின் நடிப்பும் சிறப்பு.
பாண்டி குமார் ஒளிப்பதிவும், ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்திற்க்கு வலு சேர்த்தாலும், கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பயணிகள் கவனிக்கவும்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.