‘போத்தனூர் தபால் நிலையம்’ திரை விமர்சனம்!

சென்னை:

1990 ஆம் ஆண்டில்  நடைபெறும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தின் கதையை எடுத்து இருக்கிறார்கள். இப்படத்தின் நாயகன் பிரவீன் சொந்தமாக கம்யூட்டர் தொழில் தொடங்குவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

இந்த சூழ்நிலையில் டெபாசிட் ஆக வந்த பணத்தை, வங்கியில் செலுத்தாமல் தபால் நிலையத்திலேயே விட்டுவிடுகிறார் கேஷியர்.  தபால் நிலையத்தில் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பில்லை என கருதிப் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் சோடா குடிக்க ஒரு இடத்தில் பணப் பையை வைத்து விட்டு திரும்பும்போது, அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள். அந்த பணம் ஏழு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இதனால் போஸ்ட் மாஸ்டரான நாயகன் பிரவீனின் தந்தை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்.

அவரை காப்பாற்றுவதற்காக இரண்டு  நாட்கள் விடுமுறை என்பதால், தொலைந்த பணத்தை  எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. போஸ்ட் மாஸ்டரின் மகன் பிரவீன், காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? கொள்ளை போன பணத்தை யார் திருடினார்கள் என்பதை கண்டுபிடித்தார்களா?  இதுதான் இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி தன்  நடிப்பை கொடுத்து அனைவரையும் கவனிக்க வைக்கிறார். தன் தந்தையை காப்பாற்ற களத்தில் இறங்குபவர், பணம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததும், அந்த பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை கதாநாயகி மற்றும் தன் நண்பனுடன் சேர்ந்து எடுக்கும் முடிவு எதிர்ப்பார்க்காத விதத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவதோடு, தனது நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து அனைவரின் பாராட்டுப் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், தனது அமைதியான நடிப்புடன் கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரமாகவும் மாறி திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.   1990 களில் பீரியட் படத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக ஒரு சண்டைக்காட்சியில் கராத்தே ஸ்டைலில் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

போஸ்ட் மாஸ்டராக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ் அப்பாவியாக, அளவான நடிப்புடன், ஒரு குள்ளமான மனிதன் என்று தன் மனைவியிடம் சொல்லும் காட்சியிலும்,  தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக குறையில்லாமல் நடித்திருக்கிறார். பிரவீனின் நண்பராக வரும்  வெங்கட் சுந்தர்  எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பு செய்து இருக்கிறார்.

கேஷியராக நடித்திருக்கும் சீத்தாராமன், தபால் நிலைய ஊழியர்களாக நடித்திருக்கும் தீனா அங்கமுத்து, சம்பத்குமார் என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு  நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 90களின் காலகட்டத்தை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார். டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார்ரகம்தான் என்றாலும்,  திரைக்கதை ஓட்டத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘போத்தனூர் தபால் நிலையம்’ அனைவரும் பார்க்க கூடிய படம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

 

 

'Pothanur Thabal Nilayam ' REVIEWFeatured
Comments (0)
Add Comment