தமிழ்த் திரைப்படவுலகில் தற்போது சாதியை மையமாக வைத்துதான் பல படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல்தான் “வாய்தா” படத்தின் கதையும் அமைந்து இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் சாதிய கட்டுப்பாட்டில் வேரூன்றி இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் சாதி ரீதியாக வண்ணார் சாதியைச் சேர்ந்தவர் அப்புசாமி என்கின்ற மு.ராமசாமி. சாலை ஓரத்தில் சலவைத்தொழிலாளியாக ஒரு கடை போட்டு நடத்தி வருகிறார். அவர் துணிகளை அயர்ன் செய்வதற்காக இஸ்திரி பெட்டியில் நெருப்பு கரியை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் காலையில் செல்போனில் பேசியபடியே மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவன் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மோதி, அவனும் கீழே விழுந்து விடுகிறான். இதனால். பயந்துபோன அவனை சுற்றி கூட்டம் கூடி விடவே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓடி விடுகிறான். சலவைத்தொழிலாளியான மு.ராமசாமிக்கு கை முறிந்து காயம் ஏற்படுகிறது. மருத்துவர் மு.ராமசாமிக்கு கையில் கட்டுப்போட்டு வீட்டில் படு்த்து ஓய்வு எடுக்கச் சொல்கிறார். இந்த சூழ்நிலையில் விபத்தை ஏற்படுத்தியவன் யார் என்று தெரியாததால் அந்த மோட்டார் சைக்கிளை எடு்தது தனது வீட்டின் யாருக்கும் தெரியாத ஒரு அறையில் பூட்டி வைக்கிறான் ராமசாமியின் மகனான புகழ்.
அந்த விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுக்கும் முடிவில் மு.ராமசாமியின் குடும்பத்தார் இருக்கும்போது, ஊர் பெரிய மனிதர்கள் அதை தடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று யோசனை சொல்கிறார்கள். மு.ராமசாமிக்கு மருத்துவ செலவுக்கான பணத்தையும் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் விபத்து ஏற்படுத்தியவரின் மோட்டார் சைக்கிளை மு.ராமசாமி திருடிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்க, இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது. இந்த விவகாரத்தால் நீதிமன்றத்தில் வண்ணார் சாதியைச் சேர்ந்த மு.ராமசாமிக்கு நீதிபதி நேர்மையான முறையில் நீதி கொடுத்தாரா? இல்லையா என்பதே படத்தின் கதை.
இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் புகழ் என்ற புதுமுக நடிகனுக்கு இது முதல் திரைப்படம். என்றாலும் விசைத்தறித் தொழிலாளியாக வரும் இவரது நடிப்பு இயல்பாக ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. தன் காதலி சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் போது நடிப்பிலும் அசத்துகிறார்.
கதாநாயகனின் தந்தையாக, சலவைத் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் மு.இராமசாமி தனது பண்பட்ட நடிப்பை வெளிக் காட்டியிருக்கிறார். ஏற்கனவே படத்தில் நடித்திருக்கும் இவர், ஏழை வண்ணான் கதாப்பாத்திரத்தில் தத்ரூபமாக அனைவரின் மனதிலும் பதிந்து விட்டார். நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வாய்தாவை போட்டு அவர் அலைக்கழிக்கப்படும் காட்சிகளில் அவருடைய நடிப்பு நம்மை பரிதாபபட வைக்கிறது.
கதாநாயகியாக வரும் ஜெசிகா பவுல் தனது அழகால் அனைவரையும் கவர்ந்திழுத்து, கிராமத்து பெண்ணாக தனது நடிப்பாலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். சாதிய கட்டுப்பாட்டால் தன்னுடைய காதலும், காதலனை பிரியும்போதும் படம் பார்க்கும் அனைவரையும் வேதனை அடைய வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நாசர் நீதிமன்றத்தில் வாதாடும்போது தனது சிறந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். நக்கலைட்ஸ் பிரசன்னாவும் தனக்கு கொடுத்த பணியை சரியாக செய்து இருக்கிறார்.
இதில் நடித்திருக்கும் அனைவரையும் கதைக்கு ஏற்றவாறு தகுந்த முறையில் தேர்வு செய்து இருக்கும் இயக்குனர் மகிவர்மன். தற்போது கிராமங்களில் நிலவி வரும் சாதியப் பாகுபாடுகளை பற்றியும், பல வழக்கறிஞர்களின் தங்கள் தொழில் நேர்மை பற்றியும், வாய்தாக்களாலேயே ஏழை, எளிய மனிதர்கள் படும் துன்பங்களைப் பற்றியும் தாமதப்படுத்தி நீதி சொல்லும் நீதிபதிகளின் நேர்மை பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கும் இயக்குனர் மகிவர்மனுக்கு பாராட்டு சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் சேதுமுருகவேல் அந்த கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை காட்சிபடுத்தி இருப்பது மிகவும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். நீதிமன்ற காட்சிகளும் மிகவும் இயல்பாக இருப்பது ரசிக்க வைக்கிறது. சி.லோகேஷ்வரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.
மொத்தத்தில், ‘வாய்தா’ கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.