அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே கடும் போர் நடைபெற்று வருவதன் காரணமாக, உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வந்த மாணவ, மாணவியர் உட்பட அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில், அங்கு பயின்று வந்த மருத்துவப் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு, அதனை இந்தியாவிலும் தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருப்போர் சுமார் 14,000 பேர் என்றும், இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,896 பேர் என்றும், இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தமிழ்நாடு, உக்ரைன் எம்.பி.பி.எஸ். மாணவர்-பெற்றோர் சங்கம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் கொடுத்து படிக்க முடியாத சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள்-பணத்தையும் செலவு செய்துவிட்டு, மருத்துவப் படிப்பை எப்படி தொடரச் செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். உக்ரைனில் நிலவும் அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி, சிறப்பு நேர்வாக, அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகளை தளர்த்த மத்திய அரசை வலியுறுத்தி அதற்கான உத்தரவை பெற்றுத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது. இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. எனவே, போர் சூழல் காரணமாக உக்ரைனில் பாதியிலே மருத்துவப் படிப்பினை விட்டுவிட்டு வந்துள்ள மாணவ, மாணவியர் இந்தியாவில் அதனைத் தொடரும் வகையில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தினைக் கொடுத்து, சாதகமான உத்தரவினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.