“அம்முச்சி -2” இணைய தொடர் விமர்சனம்!

சென்னை:

தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல் கதையைச் சொல்லியிருக்கும் இணைய தொடர்தான் ‘அம்முச்சி-2’ காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இணைய தொடரான இது ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

கதாநாயகி மித்ரா பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரியில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரது பெற்றோர் கல்லூரி படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு, திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்.    இந்த சூழ்நிலையில் அவளது காதலன் அருண் அந்த கிராமத்திற்க்கு வந்து அவளை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அங்கே தனது மாமாவின் குடும்பத்தினருடன் அருண் தங்குகிறார். பின்னர் தன் மாமாவின் மகன் சசியுடன் சேர்ந்து மித்ரா தந்தையுடன் கல்லூரியில் படிக்க வைப்பதற்காக பேச செல்கிறார்கள். ஆனால் மித்ராவின் தந்தையோ இவர்களிடம் சண்டையிட்டு, அவளுக்கு திருமணம்  செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து விட்டேன்…என்று அவர்களை விரட்டியடிக்கிறார். இதனால் மித்ரா மனமுடைந்து யாரையும்  திருமணம் செய்து கொள்ள  மாட்டேன். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அப்போது மித்ராவின் தந்தை தான் பார்த்த மாப்பிள்ளையிடம் ஐந்துவிதமான  போட்டிகளில் கலந்து கொண்டு,  அந்த போட்டிகளில் வென்றவர்களுக்கே  தன் மகள் மித்ராவை திருமணம் செய்து வைப்பேன் என்று அந்த கிராம மக்கள் மத்தியில் கூறுகிறார். ஒன்றும் செய்வதறியாமல் தவித்த அருண் அந்த போட்டிகளில் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். அந்த போட்டிகளில் எப்படியாவது வெல்ல வேண்டும்  என்று தீவிரமாக பயிற்சி எடுக்கிறார் அருண்.  மித்ராவின் தந்தை சொன்ன போட்டிகளில் அருண்வென்றாரா? மித்ராவை கல்லூரியில் படிக்க வைத்தாரா? என்பதுதான் ‘அம்முச்சி-2’ இணைய தொடரின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருண் மற்றும் அவரது மாமா மகனான சசி, மாமா பிரசன்னா, அம்முச்சி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பாட்டி சாவித்ரி என அனைத்து நடிகர்களும் கொங்கு மண்டல கிராமத்து வாழ்க்கையை, அவர்களது மொழியிலேயே பேசி நம் கண் முன் அசத்தியிருக்கிறார்கள்.

விவேக் சரோவின் இசையை கதைக்கு ஏற்றவாறு மனதை கவரும் விதத்தில் அமைத்து இருக்கிறார். சந்தோஷ்குமார் எஸ்.ஜே-வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார அழகையும், அந்த கிராமத்தின் இயற்கை எழில் மிகுந்த இடங்களையும் படம் பார்ப்பவர்கள் அனுபவிக்கும் விதமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

காதல் கதையை வைத்துக்கொண்டு இன்னமும் பழமைவாதம் மாறாத ஒரு கிராமத்துப் பெண் உயர்கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைச் மிக சிறப்பாக சொல்லியிருப்பதும், கல்லூரி விண்ணப்பப்படிவத்தில் டாக்டர் அனிதா கல்லூரி என்று வைத்திருப்பதும், இந்த இணைய தொடரை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கு ஒரு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். இது போனற நல்ல கதையம்சம் கொண்ட தொடர்களை இயக்கினால் அவர் வெற்றி பெறலாம். கண்டிப்பாக அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒரு வட்டார வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருப்பது அவருடைய பலம்.

இரும்புகள் நெட்வொர்க் தயாரிப்பில் சின்னமணி, மித்ரா ரங்கராஜ், சாவித்திரி, மீனா, தனம் சந்திரன், ஸ்ரீஜா, வைத்தீஸ்வரி, ரோகிணி நடராஜன், அருண்குமார், சசி செல்வராஜ், பிரசன்னா பாலசந்திரன், சந்திரகுமார், ராஜேஷ் பாலசந்திரன், மனோஜ் பீட்ஸ், தினேஷ்,  சிவன் மூர்த்தி, முத்தமிழ், சஷ்டி பிரநேஷ், தினேஷ் குமார், விக்னேஷ்வர், செல்லா, ஆதன் குமார், அப்பா ரவி, மாணிக்கம், ராம்குமார், பிரபாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி. இசை-விவேக் சாரோ, ஒளிப்பதிவு-சந்தோஷ்குமார் எஸ்.ஜே., எடிட்டர்-கண்ணன் பாலு, கலை- ஆசை தம்பி, ஒலி வடிவமைப்பு-விக்ரமன், பாடல்கள்-கிருஷ்ணகாந்த், ராஜேஷ்வர் காளிசாமி, சண்டை-ரவிராஜ், உடை-நவீனா,தீபிகா, தயாரிப்பு மேற்பார்வை-வினோத் குமார். எஸ்., மக்கள் தொடர்பு-யுவராஜ்.ஆஹா ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.

மொத்ததில் ‘அம்முச்சி-2’ இணைய தொடரை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

 

 

 

 

'Ammuchi-2' Review NewsFeatured
Comments (0)
Add Comment